திருவனந்தபுரம், பிப். 11–
மாசி மாத பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறக்கப்படும் என்றும் 17 ந்தேதி வரை திறந்திருக்கும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த கார்த்திகை மாதத்தில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அப்போது இருந்தே பக்தர்கள் அதிகளவு வருகை புரிந்தனர். அதனால் கூட்ட நெரிசலை தடுக்க பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் தனிதனி வரிசைகள் அமைக்கப்பட்டது.
17 ந்தேதி வரை திறப்பு
இந்நிலையில் தேவசம் போர்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மாதந்தோறும் சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். அந்த வகையில் மாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படவுள்ளது.
நாளை சபரிமலை கோவில் திறக்கப்பட்டவுடன் அன்று மதியம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள். மறுநாள் காலை சிறப்பு பூஜைகள் தொடங்கும். 17 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.