செய்திகள்

மாசி மக விழா : கும்பகோணத்தில் 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம், பிப்.18-

கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோவில்களில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அனைத்து சுவாமி- அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க விழா கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்றிரவு அதிகும்பேஸ்வரர் கோவிலில் 10 நாதஸ்வர, மேள கலைஞர்களின் இன்னிசை முழக்கத்துடன் பஞ்சமூர்த்தி சுவாமிகள் இந்திர விமானத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வருகிற 20ந் தேதி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலிலிருந்து 63 நாயன்மார்கள் வீதிவுலாவும் 21ந் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் 23ந் தேதி வெண்ணைத்தாழி அலங்காரமும் 24ந் தேதி காலை தேரோட்டமும் நடைபெறவுள்ளது. 25ந் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் ஆகிய 4 கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 26ந் தேதி மகாமகம் குளத்தில் மதியம் 12.30 மணிக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அந்த நேரத்தில் 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவாகப் புறப்பட்டு மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. 26ந் தேதி மாசிமகத்தன்று காலை சக்கரபாணி கோவில் தேரோட்டமும் அதே நாளில் சாரங்கபாணி பெருமாள் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *