திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாவாகக் கட்சி தந்த மாங்கனித் திருவிழாவில், ராதாகிருஷ்ணனை தேடிக் கொண்டிருந்தார்கள்.
” சீக்கிரம் அந்தக் காெலைக் குற்றவாளியக் கண்டுபிடிக்கல. நமக்கு கெட்ட பெயர் வந்திரும். எப்பாடுபட்டாவது ,அந்தக் கொலைகாரப் பயல புடிச்சா தான், நமக்கு போலீஸ்ங்கிற பேரு. இல்ல வேற மாதிரி ஆயிரும் “
என்று கங்கணம் கட்டித் தேடிக் கொண்டிருந்தார்கள் காவல் துறையினர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் நடக்கும் மாங்கனித் திருவிழா ரொம்ப விசேஷமாக நடந்து கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தில் தான் கொலைகாரன் ராதாகிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். இது திருவிழாவிற்கு வந்திருந்தவர்களுக்குத் தெரிகிறதோ? இல்லையோ? தேடிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கு மட்டும் தான் அவன் என்ன தவறு செய்தான் ? என்று தெரியும்.
எப்படியும் தப்பித்து விடலாம் என்ற எண்ணத்துடன் அந்தத் திருவிழா கூட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன். அதையும் தாண்டி அவன் ஓய்வு பெற்ற ஒரு ராணுவ வீரர் என்பதால் அவனுக்கு ஒரு மதப்பு இருந்தது.
திருவிழாவிற்கு வந்தவர்களுக்கு காவல்துறை ஆட்களைப் பார்த்து,அவ்வளவு பயம் இருந்ததாகத் தெரியவில்லை. பந்தோபஸ்துக்கு வந்திருப்பார்கள்
என்று நினைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒரு காெலைக் குற்றவாளியைத் தான் தேடிக் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஊரெல்லாம் மாங்கனித் திருவிழாவிற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்.
” நீங்க ,எங்க இருந்து வந்திருக்கீங்க? “
என்று திருவிழாவிற்கு வந்திருந்த ஒரு குடும்பத்தைப் பார்த்து ஒருவர் கேட்க
” நாங்க டெல்லியில இருந்து வந்திருக்கிறோம். சொந்த ஊரு காரைக்கால் “
” நீங்க? “
” நாங்க பெங்களூர்ல இருந்து வந்திருக்கோம். வேண்டுதல நிறைவேத்துறதுக்காக வந்திருக்காேம். “
என்று ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டிருந்தார்கள் அந்த ஊரிலிருந்த சில பேர் .
“சரி இன்னும் சாமி புறப்பாடு கொஞ்ச நேரத்துல ஆரம்பிச்சுடும். உங்க வேண்டுதல நிறைவேத்திக் கொள்ளலாம்”
என்று அவர்கள் சொன்னதும் நேர்த்திக்கடன் போட்டவர்கள் மாம்பழங்களைக் கூடை கூடையாக வாங்கினார்கள். எல்லா திசைகளிலும் காரைக்கால் அம்மையாரையும் சிவனையும் பற்றிய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
தரிசனத்தை விட்டு விட்டுத் தப்பித்து சென்ற குற்றவாளியைத் தேடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் காவல்துறையினர் .
“எப்படியும் நான் தப்பிச்சிடணும். முன் ஜாமீன் வாங்கிருங்க . என்ன கைது பண்ணுனாங்கன்னா, ஜெயில்ல போட்டுருவாங்க”
என்று அந்தத் திருவிழா கூட்டத்திற்குள் ஓடிக்கொண்டே யாருடனாே பேசிக் கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன்.
” இப்ப , நீங்க எங்க இருக்கீங்க ? “
என்று எதிர் திசையில் இருந்தவர் கேட்க
“காரைக்கால் மாங்கனித் திருவிழாவில மாட்டிக்கிட்டேன். அதில இருந்து வெளியே வந்தேன்னா ஈஸியா என்ன போலீஸ் பிடிச்சவங்க. நான் இந்த கூட்டத்திலே சமாளிக்கிறேன். எப்படியாவது எனக்கு முன் ஜாமீன் வாங்கிருங்க. ரொம்ப பயமா இருக்கு “
என்று பதட்டமும் பரபரப்புமாய் சொன்னான், ராதாகிருஷ்ணன் .
“சரி நீ ஒன்னும் கவலைப்படாதே? நான் பாத்துக்குறேன்”
என்று எதிர் திசையில் இருந்த குரல் அவனைச் சமாதானப்படுத்தியது.
எப்படியும் நாம் தப்பித்து விடலாம் என்ற சந்தோஷத்தில் காவல்துறையின் கண்ணில் படாமல் ஓடிக்கொண்டே இருந்தான் ராதாகிருஷ்ணன்.
” இன்னிக்கு ராத்திரிக்குள்ள அந்தக் கொலைகாரப் பயல புடிக்கலைன்னா, நம்மள டிபார்ட்மெண்ட்ல கேவலமா பேசுவாங்க .போலீஸ் வேலைக்கு நம்ம லாயக்கு இல்ல அப்படின்னு எச்சியக் காரித் துப்புவாங்க ” என்று ஒரு போலீஸ் சொல்ல மொத்த போலீஸ் கூட்டமும் ராதாகிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
” இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி புறப்பாடுஆரம்பிச்சுடும். உங்களோட நேர்த்திக்கடனப் பூர்த்தி செய்யலாம் ” என்று திருவிழாவுக்கு வந்திருந்தவர்கள் சொல்ல
அலங்காரத் தேரில் ஊர்வலமாக சாமி புறப்பட்டது. சிவனையும் காரைக்கால் அம்மையாரையும் போற்றி அங்கே வந்திருந்தவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த மாங்கனிகளை வீசி வீசி எறிந்து தங்கள் நேர்த்திக் கடனைத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்த ராதா கிருஷ்ணன் எப்படியாவது காவல்துறையிடமிருந்து தப்பித்து விட வேண்டும்
என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது, சாமிக்கு நேர்த்திக் கடனாக வீசப்படும் மாங்கனிகள் ராதா கிருஷ்ணன் மீது விழுந்தன. ஒரு கட்டத்தில் வீசப்பட்ட மாங்கனிகள் எல்லாம் ராதாகிருஷ்ணன் மேலேயே விழ ஆரம்பித்தன
” என்ன இது? சாமிக்கு எறிகிற மாங்கனிகள் எல்லாம் நம்ம மேல விழுகுது என்று பயந்த ராதாகிருஷ்ணன், வளைந்து வளைந்து ஓடியும் எறிகின்ற மாங்கனிகள் எல்லாம் ராதாகிருஷ்ணனையே தாக்கியது. மொத்த மக்களும் மாங்கனிகளை ஒரே சமயத்தில் வீச , மாங்கனிகள் விழுந்த வலியும் வேதனையும் பொறுக்க முடியாத ராதாகிருஷ்ணன் அங்கேயே மயங்கி விழுந்தான்.
” என்ன கொடுமை இது ? சாமிக்கு எறிகிற மாங்கனி எல்லாம் ஒரு ஆளு மேல விழுந்து அந்த ஆளு செத்து கிடைக்கிற மாதிரி தெரியுது” என்று ஊர் மக்கள் எல்லாம் ராதாகிருஷ்ணனைத் தூக்க அதற்குள் காவல்துறையும் வந்து சேர்ந்தார்கள்.
” எவ்வளவோ தேடியும் கெடைக்காத இந்தக் கொலகாரப் பய, எப்படிக் கீழ கெடக்கான்னு பாரு”
என்று ஒரு போலீஸ் சொல்ல
“சார், யாரு இவர் ?எதுக்காக இப்படி செத்துக்கிடக்காரு? ” என்று திருவிழாவிற்கு வந்த மக்கள் எல்லாம் கேட்க
“இவன் ஓய்வு பெற்ற ஒரு ராணுவ வீரன். ஆனா. ராணுவத்துக்கு பெரிய அவமானத்தையும் அசிங்கத்தையும் ஏற்படுத்திட்டான். ஒரு சின்னப் பையன் ,அவன் வீட்ல இருந்த மாங்கா மரத்தில தெரியாம மாங்காயப் பறிச்சிட்டான் அப்பிடிங்கிற ஒரே காரணத்துக்காக அந்தச் சின்னப் பயல நாயச் சுடுகிற மாதிரி சுட்டுக் கொன்னுட்டு ஓடி வந்துட்டான். எங்கெங்கே தேடுனாேம்.. அவன நாங்க கண்டுபிடிக்க முடியல. இந்தத் திருவிழா கூட்டத்தில தான் இருக்கான்னு எங்களுக்குத் தகவல் கிடைச்சது . இப்போ பாருங்க என்ன ஒரு வினோதமான விஷயம் இங்க நடந்திருக்குன்னு.
” தன்னாேட வீட்டுல இருந்த மாங்க மரத்தில, ஒரு சிறுவன் தெரியாம மாங்காயைத் திருடிட்டான்ங்கிற சின்னக் குற்றத்திற்காக அந்தச் சின்னப் பையனச் சுட்டுக் கொன்னானோ ? அதே மாங்காயால தான், இப்ப ராதா கிருஷ்ணன் கொல்லப்பட்டிருக்கான். இதுதான் விதி .”
என்று காவல்துறையினர் சொல்ல இதைக்கேட்ட பக்தர்கள் ஆச்சரியத்தில் உறைந்தார்கள்.
மாங்காய் திருடிய குற்றத்திற்காக சிறுவனைக் கொலை செய்து விட்டு, வந்த ராதாகிருஷ்ணன் அதே மாங்காயால் அடிபட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். இதுதான் இயற்கையிட்ட நீதி கடவுள் கட்டளை”
என்று சொல்லிய பக்தர்கள் சிவனையும் காரைக்கால் அம்மையாரையும் கையெடுத்து வணங்கினார்கள்.
‘அரசன் என்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் ‘
என்ற பழமொழியை உடைத்து ஒரு கொலைக் குற்றவாளியை அன்றே கொன்ற தெய்வத்தின் மாங்கனித் திருவிழா, மகத்துவமாக நடந்து கொண்டிருந்தது.
இப்போதும், காரைக்கால் அம்மையார் மீதும் சிவன் மீதும், மாங்கனிகளை வீசியெறிந்து கொண்டிருந்தார்கள், மக்கள். பஞ்சு போல் பட்டு, பூப் போல கடவுள்கள் மேல் விழுந்து கொண்டிருந்தது.
மிகுந்த மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது, மாங்கனித் திருவிழா..!
![]()





