சென்னை, ஜூன் 26-–
தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகள் பாதிக்கப்பட்டன. தென்பகுதியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இதுவரை வரலாறு காணாத பெய்த கனமழை யால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் மற்றும் சிறு பாலங்கள், பாலங்கள் சேதமடைந்தன.
போர்க்கால அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், ஒட்டபிடாரம் மற்றும் கோவில்பட்டி போன்ற இடங்களில் இரவும் பகலும் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறுகிய காலத்தில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.725 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமேசுவரம் தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும், இணைக்கும் பாதசாரிகள் நடை மேம்பாலத்தை ரூ.37 கோடியில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை 9 லட்சம் பார்வையாளர்கள் இதுவரை பயன்படுத்தியுள்ளனர். சென்னையில் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் பயன் டுத்தப்பட்டுள்ளன. அது திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 16 லட்சம் பார்வையாளர்கள் நினைவிடத்தை கண்டுகளித்துள்ளனர்.