செய்திகள்

மழை, புயல் காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன? கலெக்டர்களுக்கு உத்தரவு

Spread the love
கொரோனா தொற்றுள்ள நிலையில்

மழை, புயல் காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன?

கலெக்டர்களுக்கு உத்தரவு

 

சென்னை, மே.17-–

கொரோனா தொற்று அபாயம் இருக்கும் நிலையில், பருவமழை, புயல் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் என்ன? என்பது பற்றி மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வருவாய் நிர்வாக ஆணையரும், மாநில நிவாரண ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-–

தென்மேற்கு பருவமழை தொடங்குவதையடுத்து அதற்காக மேற்கொள்ள வேண்டிய தயார் நிலை குறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுள்ள இந்த சூழ்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் தயார் நிலையில் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வதோடு, புயலை எதிர்கொள்ள மிகச் சரியான நேரத்தில் தயார் நிலைக்கு வரவேண்டும். இதற்காக சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்படுகிறது.

அதன்படி, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் திருத்தங்களை கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும். பி.பி.இ. சோதனை உபகரணம், முகக்கவசம் போன்றவை போதுமான அளவு இருப்பில் வைக்கப்படவேண்டும்.

முன்னிலையில் நின்று பணியாற்றுவோர், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு கொரோனா முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, மற்ற பணிகளை கவனிக்கும்படி அறிவுறுத்தவேண்டும்.

புயலுக்காக மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது சமூக இடைவெளி பின்பற்றப்படுவதையும், முக கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

கூடுதல் தங்குமிடங்கள், நிவாரண முகாம்களை அமைத்து அங்கு நெரிசல் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தங்குமிடங்கள், முகாம்களில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப் படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்குமிடங்கள், முகாம்கள் சுத்திகரிக்கப்படவேண்டும்.

புயல் வீசக்கூடிய பகுதியில் தனிமைப்படுத்தும் இடங்கள் இருந்தால் அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது புயலால் பாதிப்பு வராத வகையில் பாதுகாக்க வேண்டும். மாற்றம் செய்யப்பட்டுள்ள அம்சங்கள் பற்றிய தகவல்களை அனைவருக்கும் உள்ளூர் மொழிகளில் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *