செய்திகள்

மழை பாதிப்பை சமாளிப்போம்: ஸ்டாலின் உறுதி

Makkal Kural Official

சென்னை, டிச.13–

மழை வெள்ள பாதிப்பை சமாளித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

முதலமைச்சர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே 2 நாட்களாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதை மேற்பார்வையிடுவதற்காக இங்கிருந்து மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக ஏதும் செய்தி கிடையாது. எது வந்தாலும் அதை சமாளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது.

கேள்வி: – அமைச்சர்கள் கண்காணிப்புப் பணிகளில் இருக்கிறார்களா?

பதில்: தென்காசி பகுதிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அனுப்பி வைத்திருக்கிறோம். திருநெல்வேலிக்கு நேற்று அமைச்சர் நேரு ஏற்கனவே சென்று வந்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளதால் அங்கு வந்தவரை திருநெல்வேலியில் மறுபடியும் மழை பெய்துள்ளதால் அவரை அங்கு அனுப்பியிருக்கிறோம்.

கேள்வி: பேரிடர் நிதியை ஒன்றிய அரசிடமிருந்து தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள். குறைவாகவே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தருகிறார்கள். அது பற்றி…

பதில்: ஊடகத்தில் இருக்கக்கூடியவர்கள் நீங்கள் எல்லாம் அதனை தொடர்ந்து எழுதினீர்கள் என்றால், அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும்.

கேள்வி: – ஏற்கனவே வழங்கிய நிதி போதுமானதாக இருக்கிறதா?

பதில்: அது எப்படி போதும். போதுமானதாக இல்லை.

வெள்ள அபாய எச்சரிக்கை

கேள்வி: நீர்த்தேக்கம், ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறதே வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து…

பதில்: திறந்து விடப்படுவதற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுமக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்திற்கு, பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: நிவாரணப் உதவிகள் வழங்கும் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதா…

பதில்: நிவாரண உதவிகள் கிட்டத்தட்ட வழங்கி முடிந்துவிட்டது.

கேள்வி: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது என்ன மாதிரியான எதிரொலியாக பார்க்கப்படுகிறது…

பதில்: நேற்றே தெளிவாக அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. எங்களால் முடிந்தவரைக்கும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்.

கேள்வி: கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் திட்டம் ஏதும் இருக்கிறதா?

பதில்: பார்ப்போம், யோசனை செய்வோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *