சிறுகதை

மழை நேரம் – ராஜா செல்லமுத்து

கேசவர்த்தினியை ஒட்டி இருக்கும் கோயில் அருகே சில ஆதரவற்ற மனிதர்கள் ஒதுங்கி இருந்தார்கள்.

மழை, வெயில் என்று அந்த இடம் அவர்களுக்கு என்றும் இருந்தது. வயதானவர்கள் மனப்பிறழ்வு நோய் உள்ளவர்கள் என்று சிலர் அந்த சாலையோரத்தில் படுத்து கிடப்பார்கள்.

மூட்டை முடிச்சுகளுடனும் அழுக்காேடு இருக்கும் அவர்களைப் பார்த்தால் யாரும் பக்கத்தில் செல்ல மாட்டார்கள்.

காலையிலிருந்து மாலை வரை கிடைக்கும் உணவுகளை உண்டு விட்டு இரவு நேரமானால் அந்த சாலை ஓரத்தில் இருக்கும் கோயில் அருகே இருக்கும் இடங்களில் தங்கிக் கொள்வது வழக்கம்.

அப்படித் தங்கிக் கொள்ளும் ஆட்களில் ஒரு வயது முதிர்ந்த பெண் இருந்தாள்.

பார்ப்பதற்கு கொஞ்சம் நாகரீகமாக இருந்தாள். எப்போதும் பிளாஸ்டிக் பையை வைத்துக் கொண்டு சில அழுக்குத் துணிகளைத் தூக்கிக் கொண்டும் திரிவாள்.

மனப்பிறழ்வு நோயாக இருக்கலாம் அல்லது குடும்பத்திலிருந்து துரத்தி விட்டவர்கள் மன பாதிப்புக்கு ஆளாகி மனப்பிரழ்வு நோய்க்கு ஆளாகி இருக்கலாம்.

அந்தப் பெண்மணி இந்த கூட்டத்தில் சேராமல் எதிரில் இருக்கும் ஒரு வீட்டின் அருகே அந்த தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வதுதான் அவரது வழக்கம்.

சென்னை நகரம் என்பதால் மழை பெய்வதற்கு இங்கு வாய்ப்பு இல்லை. மழை பெய்தாலும் அது எப்பாேது விடும் என்று சொல்வதற்கும் இடமில்லை. அந்த அளவிற்கு வெயிலும் மழையும் எப்போது பெய்யும் எப்போது நிற்கும் என்று யாருக்கும் தெரியாது .

பகல் முழுவதும் கொளுத்தும் வெயில் காய்ந்து கொண்டிருந்த அன்று இரவு பலத்த மழை பெய்தது.

எப்போதும் கோயில் அருகில் படுத்துக் கொள்ளும் அந்த மனிதர்கள் தங்களது இடங்களை பிடித்து தன் மூட்டை முடிச்சுகளுடன் அடைக்கலம் ஆனார்கள்.

இந்தக் கூட்டத்தோடு சேராத அந்த பெண்மணி மட்டும் மழை பெய்ததும் தன்னிடம் இருந்த மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு கோயில் அருகே படுத்து கிடக்கும் அந்த ஆதரவுற்றவர்களோடு ஐக்கியமாக ஓடினாள்.

அங்கிருந்தவர்களுக்கு மட்டும்தான் சரியாக இடம் இருந்தது. அந்தப பெண்மணி நிற்கக் கூட இடமில்லாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

சமநிலையில் இருக்கும் மனிதர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை இல்லாத போது மனப்பிறழ்வு உள்ள மனிதர்களுக்கு எப்படி வழி தெரியும்.

யாரும் அந்தப் பெண்மணியை சட்டை செய்யவில்லை. தன் கையில் இருந்த பிளாஸ்டிகைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு மழையில் நனைந்தபடியே நின்று கொண்டிருந்தாள்.

ஒதுங்குவதற்கு இடம் இல்லை என்பதால் அவளை யாரும் கூப்பிடவில்லை வேறு வழியின்றி அவள் அந்த சாலையோர மழைபெய்யாத இடத்தில் ஒதுங்கியபோது, யாரும் குரல் கொடுத்த அவளைத துரத்த வில்லை மாறாக மிருகத்தின் ஒலி எழுப்பி அந்தப் பெண்மணியை துரத்தினார்கள்.

பயந்து போன அந்தப் பெண்மணி தன் சாக்கு முட்டையைத் தூக்கிக் கொண்டு அந்த மழையில் ஓடி வந்தாள்.

அவளுக்கு அழுகையும் கண்ணீரும் ஒருசேர பற்றி கொண்டது .அவளின் புத்தி நிதானமாகத்தான் இருக்கிறதா? இல்லை புத்தி பேதலித்து போய் அழுகிறாளா என்பது அவளுக்குத்தான் வெளிச்சம்.

ஒழுகாத இடம் தேடி ஒரு வீட்டிற்கு ஓடினாள். நாய்கள் ஜாக்கிரதை என்று பெயர் எழுதி மாட்டப்பட்டிருந்து பலகை.

அந்த வீட்டிலிருந்த நாய் அந்த பெண்மணியை குரைத்துத் துரத்தியது. அங்கிருந்து பயந்து ஓடியவள் இன்னொரு வீட்டருகே போய் அடைக்கலமாக ஓடினாள். அங்கே கம்பி வலைகளைப் போட்டு யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி செய்து இருந்தார்கள்.

இன்னொரு இடம் தேடி ஓடினாள். அந்த வீட்டில் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருந்தார்கள்.

மழை சோ என்று பெய்து கொண்டிருந்தது. அங்குமிங்கும் அங்கும் இங்கும் ஓடி ஏதாவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று ஓடினாள்.

நகரத்தில் அப்படி மனிதர்களும் இருக்கிறார்களா? வாசல் வரை இரும்பு கேட். நாய்கள் ,சுவர் என்று அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தான் இங்கு வாழ்கிறார்களே தவிர மற்றவர்கள் நிழலுக்கோ மழைக்கோ ஒதுங்க முடியாதபடிக்கு தான் இல்லங்களை கட்டி வைத்திருக்கிறார்கள் என்பது அந்த பெண்மணிக்கு தெரிந்தது.

சுற்றிச் சுற்றி ஓடும் போது தெருவில் படுத்துக் கிடந்த நாய்கள் எல்லாம் அந்தப் பெண்மணியை பார்த்து குரைக்க ஆரம்பித்தன.

பயந்து பயந்து ஓடினாள்.அவளால் ஒரு கட்டத்திற்கு மேல் எங்கும் ஓட முடியவில்லை. தொப்பலாக நனைந்த அந்தப் பெண்மணி இனியும் நனைவதற்கு எதுவும் இல்லை. நனைந்தபடியே எங்காவது ஒதுங்கலாம் என்று ஒரு ஓரத்தில் ஒதுங்கினாள்.

அவள் ஒதுங்கி இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. இயன்றவரை இலைகளில் மழையைத் தாங்கிய மரம் அந்த பெண் மீது விழும் மழையைத் தடுக்க முடியவில்லை.

தொப்பலாக நனைந்திருந்த மரம் மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த அந்த பெண்மணியையும் நனைத்தது.

விடாத மழை. இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் அடித்தது.

இப்பதான் கொஞ்சம் மழை பெஞ்சு இருக்கு .மழை பெஞ்சா தான் இந்த ஊர் எல்லாம் வாழ முடியும் என்று சில மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு மணி நேர மழை பெய்து ஓய்ந்தது :

மரங்களில் விழுந்த தண்ணீர்களெல்லாம் இலை வழியாகத் தூறலைப் பெய்து . மழை நின்றது .

ஆட்கள் அங்கங்கு நடமாடிக் கொண்டிருந்தார்கள். மழைக்கு ஒதுங்கி அந்த பெண்மணி மரத்தின் கீழே சாய்ந்து கிடந்தாள்.

அவள் எதற்காக கிடக்கிறாள். அவள் யார்? அவள் நிலை என்ன? என்று யாரும் கவனிக்கவில்லை ஒதுங்க இடம் இல்லாத அந்த பெண்மணி சுயநினைவற்று கிடந்தாள்.

இரவு கடந்தது. அதிகாலை அந்த வழியாக வாக்கிங் போகும் மனிதர்கள

என்ன இங்கே ஒரு டெட் பாடி கிடக்கிற மாதிரி இருக்கு ? என்று பேசினர் .

யாரும் அருகில் செல்லவில்லை. சிறிது நேரத்திற்கு எல்லாம் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லப்பட்டு காவலர்கள் வந்து அந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்தார்கள் .

மனநிலை பாதிக்கப்பட்டவங்க மழையில ஒதுங்க முடியாம நைட்டு இறந்துட்டாங்க சார்.

என்று ஒருவன் சான்றிதழ் கொடுக்க ஆம்புலன்ஸ்ல் பிணமாக ஏற்றி செல்லப்பட்டாள் அந்தப் பெண்மணி .

நைட்டு நல்ல மழை .நேத்து தான் நிம்மதியா இருந்துச்சு. இப்படி தினந்தோறும் மழை பெஞ்சா நல்லா இருக்கும் என்று பேசிப் போனார்கள் மனிதர்கள்.

மழைக்கு இறந்த அந்த பெண்ணின் பூதவுடல் ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தது..

அந்த இரவும் மழை வலுக்கத் தொடங்கியது .

ஏதோ ஒரு இடத்தில் படுக்க இடம் இல்லாத ஒரு அனாதை மழை விழாத இடம் தேடி ஓடிக்கொண்டிருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *