வாழ்வியல்

மழை நீரை சேமித்து உப்புநீரைக் குடிநீராக மாற்றிய கேரள வாலிபர்


அறிவியல் அறிவோம்


மலை, காடு, வயல், கடல் என ஐந்திணை நிலங்களுக்கும் கடவுளின் சொந்த நாடான கேரளத்தில் துளியளவும் பஞ்சம் கிடையாது. திரும்புகிற திசையெல்லாம் பச்சைப்பசேல் என வளமான மாநிலம். இருப்பினும் அரபிக் கடலோரம் உள்ள கேரளாவின் மாவட்டங்களில் நிலத்தடி நீர் முழுவதும் உப்புத் தன்மையாக மாறி குடிக்கவே பயன்படுத்த முடியாத நிலை.

அப்படித்தான் கொச்சி – செல்லனம் கிராமத்தைச் சேர்ந்த கே.ஜெ. ஆன்டோஜியும் நிலத்தடி நீரைக் குடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஆனால் அதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைதான். இப்போது அந்த நிலையை முற்றிலும் தனது முயற்சியினால் மாற்றிவிட்டார். அதுமட்டுமல்லாது அடுத்தவர்களுக்கும் உதவி வருகிறார்.

அது எப்படி? அவரே விவரிக்கிறார். “இருபது வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் எப்போதும்போல எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன். அப்போது லேண்ட்லைனில் ஓர் அழைப்பு வந்ததால் ஹோஸ் பைப்பை அப்படியே போட்டுவிட்டு பேச சென்றிருந்தேன். திரும்ப வந்து பார்த்தபோது மண்ணுக்குள் ஓர் அடி ஆழத்திற்கு ஹோஸ் பைப் புதைந்திருந்தது. மேலும், அது நீரையும் சுரக்கச் செய்ததைக் கவனித்தேன். தொடர்ந்து அந்த ஹோஸ் பைப்பின் நெகிழ்வுத் தன்மையைப் பயன்படுத்தி எட்டு அடி வரை குழாயைப் பூமிக்குள் நுழைத்தேன். அப்போதும் அது தொடர்ந்து நீரைக் கொடுத்ததைப் பார்த்தேன். அதுதான் நான் கண்டுபிடித்த வாட்டர் சிரஞ்சுக்கு மூலக் காரணம்.

வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரை நேரடியாகப் பூமியில் அமைக்கப்பட்டுள்ள போர் குழாயில் செலுத்தி அதன் மூலம் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்து குடிப்பதற்கு உகந்த வகையில் மாற்றுவதுதான் எனது முயற்சி. அதற்காக வீட்டின் மீது பட்டு வழிந்து வீணாகும் மழைநீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரித்து, அதைக் குழாய் மூலம் பூமிக்குள் செலுத்தினேன். இந்த மாதிரியை எங்கள் ஊர்ப் பெயரான `செல்லனம் மாடல்’ என மக்கள் சொல்லுவதுண்டு.

பூமியில் உள்ள நீர் துவாரங்களைக் கண்டுணர்ந்து அதில் இந்த மாதிரியைப் பொருத்தி விட்டால் போதும் அள்ள அள்ளத் தண்ணீர்தான். இது பூமிக்குள் இருக்கின்ற ஒரு பெட்டகம் போல. பூமியில் சேமித்து வைக்கப்படும் நன்னீரைத் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

தொடக்கத்தில் எட்டு முதல் பத்து மீட்டர் வரைதான் இந்தப் பணியைச் செய்து வந்தோம். இப்போது 200 முதல் 400 மீட்டர் ஆழம் வரை ஆறு இன்ச் விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி இந்தப் பணியைச் செய்கிறோம். இதன் மூலம் எத்தனை லிட்டர் நீரை வேண்டுமானாலும் சேர்த்துவைக்கலாம்.உலகிலேயே மழைநீரைச் சேகரிக்க உதவுகின்ற ஆகச் சிறந்த முயற்சிகளில் இந்த மாதிரியைப் போல எதுவுமே இல்லை” என்கிறார் ஆன்டோஜி. இவர் கொச்சி, அந்தமான் மற்றும் கோவா என 400க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மாதிரியைப் பொருத்தியுள்ளார். வீடு, நட்சத்திர விடுதி, விவசாய நிலம் என அனைத்தும் இதில் அடங்கும்.

ஆன்டோஜி இப்போது மேற்கொண்டுள்ள முயற்சி அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் பெரிதும் பலன் கொடுக்கும் என நம்பப்படுகிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *