சிறுகதை

மழைப் பயணம் – ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்களாக கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது மழை. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு. குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலைகள் எல்லாம் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் எல்லாம் சமமாக தெரிந்தது.

எது மேடு, எது பள்ளம் என்று அறியாமல் வாகனங்களில் செல்பவர்கள் முட்டி மோதி கீழே விழுந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

ராகவன் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார். ஓரளவுக்கு நின்றிருந்தது மழை.

இப்படியே அலுவலகத்திற்கு சென்று விட்டால் சாயங்காலம் எப்படியாவது திரும்பி வந்து விடலாம் என்பது அவரது கணக்கு.

அவருடைய வீட்டிலிருந்து வெளியே வந்தவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். திரும்பி திரும்பித் தெருக்களைப் பார்த்தார். மழை ஓரளவுக்கு விட்டிருந்தது. மழைநீர் சீராகச் சென்று கொண்டிருந்தது.

ஓகே எப்படியும் அலுவலகம் சென்று விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு எட்டிப்பார்த்தது.

வழக்கமாக தன் அலுவலகத்திற்கு பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தை அவர் எடுக்கவில்லை. ஏனென்றால் சைலன்ஸர்ல் தண்ணி புகுந்தால் எப்போது எங்கு வண்டி நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதை தள்ளிக்கொண்டு செல்வதும் சாத்தியப்படாது என்று நினைத்தவர் தன் டூவீலரை வீட்டிலேயே விட்டுவிட்டு ,

ஊபர் புக் செய்து அலுவலகத்திற்கு கிளம்பலாம் என்று முடிவு செய்தார் தன்னுடைய கைபேசியை எடுத்து ஊபர் புக் செய்தார் .மழைக் காலம் என்பதால் ஆளுக்கு ஒரு விலை வைத்திருந்தார்கள் வழக்கமான நாட்களில் 100, 200ஆட்டோக்கள் எல்லா 500, 600 என்று இருந்தது .கார் புக் செய்தால் ஆயிரத்தை தாண்டி நின்றது.

என்ன கொடுமை இது ? நம்முடைய அலுவலகத்திற்கும் வசிக்கும் வீட்டிற்கும் கூடுதலாக வேண்டுமென்றால் நான்கு கிலோமீட்டர்கள் இருக்கலாம். அதற்கு இவ்வளவு பணமா? அரசாங்கம் நிர்ணயித்தது கிலோ மீட்டருக்கு விலை இருபது ரூபாய் என்றால் 4 கிலோ மீட்டருக்கு 80 ரூபாய் தானே வரவேண்டும்.

இது என்ன அநியாயம்? கொடுமையாக இருக்கிறது. மழை மனிதர்களுக்கு நரகம் என்றால் வாடகைக்கு வாகனம் ஓட்டுவதற்கு சொர்க்கம் .இது என்ன என்று புலம்பிக் கொண்டிருந்த ராகவன் இன்னொரு ஊபரை புக் செய்தார் 750 என்று காட்டியது.

நம்முடைய சம்பளமே ஒரு நாளைக்கு 500 ரூபாய்தான். 750 கொடுத்து அலுவலகத்திற்கு செல்வதா?வேண்டாம் என்று தனக்கு தானே வருத்திக் கொண்டார் .

என்ன இது இவ்வளவு பணம் கேட்கிறார்கள் என்று நினைத்தவர் புக் செய்த ஆட்டோவை கேன்சல் செய்துவிட்டு ,மறுபடியும் ஊபரை புக் செய்தார்.

750 ரூபாய்க்கு குறைந்து எந்த வாடகை கட்டணமும் இல்லாமலிருந்தது. அலுவலகத்திற்கு இன்று விடுமுறை எடுத்து விட்டால் எழுநூற்றி ஐம்பது ரூபாய் மிச்சம் நமக்கு என்று நினைத்த ராகவன் வீட்டிற்கு உள்ளே நுழைய முற்பட்டார்.

அப்போது அந்த தெரு வழியாக வீதியை தூய்மை செய்யும் வண்டி வந்து கொண்டிருந்தது.

ஓஹோ நம்ம ஊரு….. சுத்திப் பாரு… சுத்தம் பாரு …..இது நம்ம சென்னை தாய்யா…. வண்டிக்குள்ள குப்பையை பிரிச்சு போடவா….. என்று பாடல் பாடியபடியே வந்ததை கவனித்தாலும் அவர் வழக்கமாக அந்த தெருவிலேயே வருபவர் என்பதால் அந்த வண்டிக்காரர் அவருக்கு தெரிந்தவர்.

என்ன சார்? ஆபீஸுக்கு போகலையா? என்று கேட்க

இல்லங்க எல்லா வண்டியும் புக் பண்ணா, 700, 800 பணம் கேட்கிறாங்க இன்னைக்கு நான் ஆபீஸ்க்கு போகல லீவ் போட்டுட்டேன் என்று ராகவன் சொன்னபோது,

அட நம்ம வண்டியில் குந்திக்க சார்.உன்னோட ஆபீஸ் வழியா தானே போறேன் .அப்படியே ஒன்னை இறக்கி விட்டு போறேன் சார். ஒன்னும் சங்கடப்படாத சார் என்றார் அந்தகுப்பை வண்டிக்காரர்.இது நல்ல ஐடியாவா இருக்கே? என்று யோசித்த ராகவன் கொஞ்சம் கூட சிந்திக்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தார். வண்டியில் அவர் அமர்ந்திருந்த சீட்டில் ஒரு ஓரம் ஒதுங்கி கொண்டு ராகவனுக்கும் இடம் கொடுத்தார். ராகவன் டிப்டாப்பாக இருந்ததால் அதில் ஏறுவதற்கு மனமில்லை என்றாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த குப்பைகளை அள்ளிக்கொண்டு இந்த நகரத்தை சுத்தமாக்கும் இவரும் ஒரு மனிதர் தானே?இவர் இந்த வண்டியில் அமர்ந்து தினமும் போகும் போது ஏன் நாம் வண்டியில் அமர்ந்து செல்லக்கூடாது ? அதுவும் நம் அலுவலகம் கடந்துதான் இவர் செல்ல வேண்டும் என்று சொல்கிறார் . ஏன் நான் போகக்கூடாது? இந்த வண்டியில் ஏறினால் நமக்கு 750 ரூபாய் மிச்சம் என்றாலும் , தெருவைச் சுத்தமாக்கும் அந்த வண்டி, இப்புனித வண்டியில் ஏறி சென்றால் நமக்கும் அந்தப் புண்ணியம் புனிதம் கிடைத்தது போல தானே? என்று நினைத்த ராகவன்,

தம்பி வாங்க என்று அந்த குப்பை வண்டிக் காரரை அழைத்து சென்று அந்தக் குளிருக்கு இதமாக, சுடச்சுட காபி வாங்கிக் கொடுத்தார்.

இல்ல சார்…. வேணாம் சார்….வா சார் போகலாம் ….என்று அவர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்.

இல்ல நீங்க வாங்க உட்காருங்க. காபி குடிங்க என்று அவர் கையை பிடித்துக் கொண்டு ,அங்கிருந்த உயர்தர ஒரு ஹோட்டலில் காபியும் வாங்கிக்கொடுத்து அவர் வண்டியில் அமர்ந்தார் ராகவன்.

வாகனங்கள் அந்த தெருவில் விரைந்து கொண்டிருந்தன. அந்த தெருவை சுத்தம் ஆக்கிய அந்த குப்பைவண்டியும் நகர்ந்துகொண்டிருந்தது.

தண்ணீர் ஒரு வழியாக கொஞ்சம் கொஞ்சமாக வழிந்துகொண்டிருந்தது.

“ஒஹாே நம்ம ஊரு …..சுத்திப் பாரு….சுத்தம் பாரு….. இது நம்ம சென்னை தாய்யா, ” என்று பாடல் பாடியபடியே அந்த குப்பை வண்டி ராகவனை ஏற்றி கொண்டு சென்றது.

அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை உதித்தது. இந்த மனித அழுக்குகளை சுமந்து கொண்டு போகும் இந்த வாகனத்தில் நாமும் இருக்கிறோம்.. இவ்வளவு அழுக்கையும் நானும் சேர்ந்துதான் சுத்தம் செய்தோம்” என்ற மன நிலை நமக்கு இருக்கிறது என்று நினைத்தபடியே அந்த குப்பை வண்டியில் அமர்ந்திருந்தாார் ராகவன்

பாடல் பாடியபடியே சென்று கொண்டிருந்த குப்பை வண்டி அவரின் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

ராகவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *