செய்திகள்

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் முதல் கட்டத்தில் 95% முடிந்து விட்டது: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

சென்னை, நவ.4–

கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் மழைநீர் வடிந்து மக்களின் இயல்பு நிலை பாதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடந்ததால் தண்ணீர் தேங்கவில்லை. வரும் காலத்தில் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க, கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த ஆண்டு 75 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் முதல் கட்டத்தில் 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என்றார் அவர்.

பெருநகர சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு பகுதியில் மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பருவ மழையால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தாழ்வான பகுதிகளில் குறிப்பாக திரு.வி.க. மண்டலத்திற்குட்பட்ட திரு.வி.க. நகர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகள், எழும்பூர் தொகுதியின் ஒரு சில பகுதிகளில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றுகின்ற பணிகளும், அந்த பகுதிகளில் நீர் தேக்கத்திற்கு பிறகு கழிவுகள் இருந்ததால் அவற்றை அகற்றி, சுத்தப்படுத்துகின்ற பணிகளும் முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலோடும், தொடர் கண்காணிப்போடும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த தாழ்வான பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கவும், அப்பகுதி மக்களுக்கு எந்தவிதமான சிறு உபாதைகள் கூட ஏற்படாத வண்ணம் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தேவைப்படுகின்ற பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து, தேவையான மருத்துவர்கள், போதுமான மருந்துகள் வழங்கி மக்களுக்கு எவ்வித உடல் நலக்குறைவும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

4 நாட்களில் 40 செ.மீ மழை

திரு.வி.க.நகரின் சில பகுதிகளில் ஏற்படுகின்ற மின்தடைகளையும் உடனுக்குடன் சரி செய்கின்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு பருவமழை போது 20 செ.மீ அளவுக்கு திரு.வி.க.நகர் பகுதியில் மழை பெய்தது. இந்த முறை இப்பகுதியில் 4 நாட்களில் 40 செ.மீ மழை பெய்துள்ளது. ஆனால் தண்ணீர் முழுவதுமாக வடிந்து விட்டது. தண்ணீர் நிற்கும் ஒரு சில பகுதிகளை கண்டறிந்து அங்கும் தண்ணீர் தேங்காத வகையில் அடுத்த பருவமழைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன்னை துதிபாடுவதாக கூறியுள்ளார். பதிலுக்கு பதில் லாவாணி பாடுவதில் தனக்கு உடன்பாடில்லை. இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் மணி அடிப்பது தான் முக்கிய பணி. அதனால், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதில் தவறில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக தனது பணியை செய்து வருகிறேன்.

குறைகளை கூறுவதற்கு

அருகதை இல்லை

அண்ணா தி.மு.க. உட்கட்சியில் இருக்கும் பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியவில்லை, அதனால் அவர்கள் அரசின் செயல்பாடுகளை குறை கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை. சென்னை மாநகராட்சி மழை நிவாரணப் பணிகளில் முதலமைச்சரின் செயல்பாடுகளை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர். இனி வரும் காலங்களில் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *