செய்திகள்

மழைநீர் சேமிப்புக்கு 100 நாள் பிரச்சாரம்: மோடி அறிவிப்பு

புதுடெல்லி, பிப்.28

கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். தண்ணீர் சேமிப்பு குறித்த நமது பொறுப்புணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சில நாட்களில், ஜல்சக்தி அமைச்சகம் மழைநீர் சேமிப்பு தொடர்பான பிரச்சாரத்தைத் தொடங்கும். 100 நாட்கள் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இன்று ‘மன்கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இயற்கை அளிக்கும் தண்ணீரை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நீரானது நமக்கு இயற்கை அளித்த கூட்டு பரிசு. அதனை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நீரை பாதுகாக்கும் கூட்டு முயற்சி திருவண்ணாமலையில் நடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகின்றனர்.

இந்தியாவின் ‘பெரும்பான்மை பகுதிகளில் மே ஜூன் மாதங்களில் மழை பெய்யத் துவங்குகிறது. நீர்வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாள் இயக்கத்தை நாம் துவக்கலாமா? இதற்காக தான் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் ‘மழைநீர் சேகரிப்போம்’ இயக்கம்.

எங்கு மழை பெய்கிறதோ, எப்போது மழை பெய்கிறதோ அதை வீணாகாமல் சேகரித்து வைப்போம்’.


உலகின் அழகான மொழிகளில் தமிழும் ஒன்று: மோடி பெருமிதம்

‘‘உலகின் தொன்மையான மொழியான தமிழை கற்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளின் ஆழம் குறித்து என்னிடம் பலர் கூறியுள்ளனர்.

இந்த உலகத்தில் மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.

குஜராத் முதல்வரானதில் இருந்து பிரதமர் ஆன பின்பும் தமிழ் கற்று வருகிறேன். ஆனால், சரியாக கற்க முடியவில்லை.

தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அந்த மொழியில் உள்ள இலக்கியம் மிகவும் தொன்மை வாய்ந்தவை.


வாழை மரக்கழிவிலிருந்து கயிறு தயாரிக்கும் யந்திரம்: மதுரை முருகனுக்கு பாராட்டு

மதுரை விவசாயி முருகன்

விவசாய வேளாண் கழிவுகளிலிருந்து வெற்றிகரமாக வருவாயைப் பெருக்கும் ஆக்கப்பூர்வமான சோதனைகள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரையைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் வாழை கழிவிலிருந்து கயிறு தயாரிக்கும் யந்திரத்தை தயாரித்துள்ளார். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் அசுத்தப்படுவது களையப்படும். அதோடு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்க வழிபிறக்கும்.

நமது அறிவும் தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால், எதையும் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. தற்போதைய இளைஞர்களிடம் புதிய மாற்றத்தை உணர முடிகிறது. இன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. ‘ ராமன் விளைவை’ கண்டுபிடித்த நமது விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது இளைஞர்கள் படிப்பதுடன், இந்திய அறிவியல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தன்னிறைவு இந்தியா திட்டத்தில் அறிவியலின் பங்களிப்பு மிகப்பெரியது.

தன்னிறைவு இந்தியாவிற்காக இந்தியாவில், ஏராளமானோர் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். தேஜாஸ் ரக போர் விமானங்கள் நடுவானில் இவ்வகை விமானங்களின் வீரதீர சாகசம், டாங்கிகள் தயாரிப்பு, ஏவுகணைகள் தயாரிப்பு, மெட்ரோ ரெயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பு, கொரோனா தடுப்பூசி இப்படி இந்தியத் தயாரிப்புகளில் தற்சார்பு தன்னிறைவு தேசத்தையே பெருமிதப்படுத்தும் அம்சங்கள்.

டில்லியில் உள்ள எல்இடி பல்ப் தொழிற்சாலையில் பணிபுரிந்த பிரமோத் என்பவர், பல்ப் உற்பத்தியை புரிந்து கொணடு, தனது சொந்த ஊரில், சிறிய அளவில் எல்இடி பல்ப் தொழிற்சாலையை துவக்கி உள்ளார். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, காசிரங்கா தேசிய பூங்காவில் 112 பறவை இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதற்கு நீர் சேகரிப்பும், குறைந்தளவு மனிதர்கள் நடமாட்டமும் காரணமாகும்.

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை

வாரணாசி சமஸ்கிருத கல்லூரிகளுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை செய்யப்படுவது இங்கு தனிச் சிறப்பு. கிரிக்கெட் வீரர்களும் வர்ணனையாளர்களும் பாரம்பரிய உடையிலேயே தோன்றுவதும் சிறப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *