செய்திகள்

மளிகை, காய்கறி கடைக்காரர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

மளிகை, காய்கறி கடைக்காரர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி, ஆக.9-

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மளிகை, காய்கறி கடைக்காரர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகம் எடுத்துள்ளது. தொடர்ந்து நேற்று 2வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு மளிகை, காய்கறி கடைக்காரர்கள், தொழிலாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துமாறு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. இதையொட்டி, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் அதிரடியாக ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கொரோனா வைரஸ் இறப்பு வீதத்தை குறைக்க வழிவகுக்கும் வகையில் பாதிக்கப்பட்டோரை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதற்காக மளிகை, காய்கறி கடைக்காரர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ஆம்புலன்ஸ் சேவையை ஆக்சிஜன் வசதியுடனும், விரைவான பதில் அளிப்பு வசதிகளுடனும் செயல்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் மறுப்பு விகிதம் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு, பூஜ்ஜியம் என்ற அளவுக்கு குறைக்கப்பட வேண்டும்.

தற்போது கொரோனா நாட்டின் புதிய பகுதிகளுக்கு பரவி வருகிறது. மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா பாதிக்க வாய்ப்பு உள்ளது. பரவல் வாய்ப்புகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். இதுவரையில் மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளோம். எங்கள் நோக்கம், இறப்பை மேலும் குறைப்பதோடு அது 1 சதவீதம் என்ற அளவை கடந்து செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

தீவிரமான பரிசோதனைகளால் கொரோனாவை முன்கூட்டியே கண்டுபிடிப்பது வைரஸ் பரவலையும் தடுக்க முடியும்.

இன்புளூவென்சா போன்ற நோய், கடுமையான சுவாச நோய் ஆகியவற்றின் அறிகுறிகள் கொரோனா போன்றே இருப்பதால் சிறப்பான கண்காணிப்பு வேண்டும். அவர்களுடன் தொடர்புடைய குறைந்தது 80 சதவீத தொடர்புகளை 72 மணி நேரத்துக்குள் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்.

அதிக ஆபத்தில் இருப்பவர்களை குறிப்பாக முதியோர்களை, நாள்பட்ட வியாதிகளுடன் இருப்பவர்களை, கர்ப்பிணிகளை யெல்லாம் அடையாளம் காண்பதற்கு அவ்வப்போது வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்துவதை வழக்கப்படுத்த வேண்டும்.

சீக்கிரம் தொற்று பாதித்தவர்களை கண்டறிய சந்தேகத்துக்கு உரிய அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதிலும், உரிய நேரத்தில் நோயாளிகளை சிகிச்சைக்கு சேர்ப்பதிலும் பொறுப்புள்ள அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இடையே தகவல் தொடர்பு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *