செய்திகள்

மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

டோக்கியோ, மே 8–

மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பல்கேரியாவில் நடந்த மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 50 கிலோ எடை பிரிவில் போலந்து நாட்டின் அன்னா லூக்காசியாக்கிற்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் 2–-1 என்ற புள்ளி கணக்கில் திறமையாக விளையாடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு பிஸ்லா முன்னேறியுள்ளார்.

29 வயதுடைய பிஸ்லா இந்த வெற்றியால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ) மற்றும் சோனம் மாலிக் (62 கிலோ) ஆகிய 3 பேர் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தனர்.

பிஸ்லா 4வது வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 3 மல்யுத்த வீராங்கனைகள் விளையாடி இருந்தனர். பிஸ்லாவின் வெற்றியால் இந்த முறை, முதன்முறையாக இந்தியாவில் இருந்து 4 மல்யுத்த வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர்.

துடுப்பு படகு போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய-ஓசியானா மண்டல துடுப்பு படகு தகுதி சுற்று போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ பிரிவு பந்தயத்தில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட், அர்விந்த் சிங் ஜோடி 2-வது இடத்தை பிடித்தது. முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய ஜோடி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்து இத்தாலியில் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி ஒன்று நடக்க இருந்தாலும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய அணியினர் யாரும் அந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *