இந்திய மகள்களின் தோல்வி என சாக்ஷி மாலிக் விமர்சனம்
லக்னோ, மே 3–
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரிஜ் பூஷன் சரணுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில், அவருடைய மகனை, பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, இன்னும் சில தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச் தொகுதியும் அடங்கும். இத்தொகுதியில் முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவர்மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து டெல்லியில் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதனால் பிரிஜ் பூஷனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க, பா.ஜ.க தயங்கிக்கொண்டிருந்தது.
இந்திய மகள்களுக்கு தோல்வி
ஆனால் தனக்கு கட்டாயம் சீட் வேண்டும் என்று பிரிஜ் பூஷண் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து, பிரிஜ் பூஷண் மனைவிக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து பா.ஜ.க பிரிசீலித்தது. அவர் தனக்கு சீட் கொடுக்கவில்லையெனில், சமாஜ்வாடி கட்சியில் சேரப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்தார். இதனால் வேறு வழியில்லாமல் கைசர்கஞ்ச் தொகுதியில் பிரிஜ் பூஷண் மகன் கரன் பூஷண் சிங்கிற்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. கரன் பூஷண் சிங், தற்போது உத்தரப்பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறார். பிரிஜ் பூஷனின் மூத்த மகன் பிரதிக் பூஷண் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.
பிரிஜ் பூஷண் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ”இந்தியாவின் மகள்கள் தோற்றார்கள், பிரிஜ் பூஷண் வென்றார். நாங்கள் அனைவரும் எங்கள் விளையாட்டைப் பணயம் வைத்து பல நாள்கள் வெயிலிலும் மழையிலும் தெருவில் தூங்கினோம். இன்றுவரை பிரிஜ் பூஷண் கைதுசெய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் சீண்டல்களுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பல நாள்கள் டெல்லியில் தெருவில் போராட்டம் நடத்திய பிறகு, உச்சநீதிமன்றம் தலையிட்டதால், பிரிஜ் பூஷண் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.