சென்னை, பிப்- 4–
முனைவர் காஞ்சனா ஜனார்த்தனன் தலைமையில் சென்னை நகரில் வெற்றிகரமாக இயங்கி வரும் ‘மயூரா ஸ்கூல் ஆஃப் கிளாசிக்கல் டான்சஸ்’ நாட்டியப் பள்ளியின் மாணவி மோக்ஷா மோகன கிருஷ்ணன். மலேசியாவில் வாழும் வெளிநாட்டு தமிழர். அங்குள்ள இந்தியன் குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி. சென்னையில் இருந்து ஆன்லைன் மூலமும், பிறகு 10 நாட்களுக்கு நகரில் முகாமிட்டு நேரடி பயிற்சி மூலமும் நடனம் பயின்றவரின் அரங்கேற்றம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
65 ஆண்டுகளுக்கு மேல் பரதத்தில் பழுத்த அனுபவம் பெற்று இருக்கும் 78 வயது நாட்டிய ஆச்சாரியார் பத்மஸ்ரீ கனகா சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குருவையும் மாணவியையும் வாழ்த்தினார்.
கணேஷாஞ்சலி, மாருதி சப்தம், தசாவதார வர்ணம், மயிலை கற்பகாம்பாள் புகழ் மாலை, சிவன் தில்லானா, திருப்பாவை பாசுரம்… ஆகிய 6 உருப்படிகளை வெகுவாக ரசித்தவர், மோக்ஷாவின் அடவுகளையும், முத்திரையையும், அனுபவித்து அனுபவித்து காட்டிய பாவங்களையும், கர்ணங்களையும் தனித்தனியாக குறிப்பிட்டு பாராட்டினார்.
“ஐ ஆம் ஸ்பீச்லெஸ்…” (பேசவே வார்த்தை வரவில்லை) என்று மூன்றே வார்த்தையில் முழு நாட்டிய நிகழ்வையும் விமர்சித்தார்.
“வாயு மைந்தனே… வானவ வீரனே…” என்று துவங்கிய மாருதி சப்தத்தில் நிமிர்ந்து உட்கார வைத்தவர், கடைசி திருப்பாவை பாசுரம் வரை… மோக்ஷாவை சுற்றியே பார்வையை பதிய வைத்தது- குரு காஞ்சனாவின் பயிற்சி- உத்தியை சொல்வதா… இல்லை சிஷ்யையின் கிரகிக்கும் புத்தியைச் சொல்வதா என்று கேள்வி எழுப்பினார்.
“எதிர்காலத்தில் அருமையான ஒரு ஆடல் இளவரசி இனிய உதயம்” என்று குறிப்பிட்டு வாழ்த்தியவர், அது வெறும் பொழுதுபோக்கு தான் என்றாலும், திரைப்படப் பாடல்களுக்கு ஆடவும் வேண்டுமா…? என்று கேட்டு வேண்டாமே.. என்று மோக்ஷாவுக்கு புத்திமதி கூறினார்.
மக்கள்குரல் வீ. ராம்ஜீயும், மகாலட்சுமி ராம்ஜீயும் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, குரு,- சிஷ்யையை வாழ்த்தினார்கள்.
ஆண்டாள் தவிர மற்ற ஐந்து உருப்படிகளுக்கும் சாகித்தியகர்த்தா – முனைவர் வெங்கடசுப்பிர மணியன். கீபோர்ட் கலைஞரும் கூட. காஞ்சனா ஜனார்த்தனத்தின் நட்டு வாங்கம் பத்மினி லட்சுமி நாராயணனின் வாய்ப்பாட்டு, ஆர் சுரேஷின் மிருதங்கம்: மோக்ஷாவின் ஆட்டத்திற்கு வேகம்+ விறுவிறுப்பு= அரங்கின் கைதட்டல்.
சண்முகத்தாய்- ஒப்பனை, ஆஹாரியா -ஆடை அலங்காரம், புகைப்படம், வீடியோ- காம்மா 360 ஸ்டுடியோஸ்.
பெற்றோர்கள் மோகன கிருஷ்ணன், ஸ்ரீவித்யா, கோவிந்தராஜன், லதா குடும்பத்தினர் வந்திருந்தவர்களை வரவேற்றனர்.
பகடை உருட்டிய மகாபாரத சகுனி…, சிவனின் சாபத்தால் மயில் உரு கொண்ட உமையாள்- சாபம் நீங்கி உமையாளாய்… மோக்ஷாவை மறக்க முடியுமா?!
மோக்ஷா-, மலேசிய மண்ணிலிருந்து வந்தார், முத்தமிழ்ப் பேரவையில் நின்றார், குரு காஞ்சனாவை மெச்சும்படி அரங்கை வென்றார்!
வீ. ராம்ஜீ