சென்னை, பிப் 10–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கு. கமலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார்.
மேலும், புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் வி.சுப்ரமணிக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த கு. கமலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரைச்சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் என நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்தப் போட்டிகளில் கு. கமலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 13 முதல் ஜனவரி 19, 2025 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக “சிறந்த தொடுதாக்கு வீரர் விருது” (Best Attacker Award) வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-–36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்தப் போட்டிகளில் சுப்ரமணியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கிரிக்கெட் வீராங்கனை கு. கமலினி மற்றும் கோ-கோ வீரர் வி.சுப்ரமணி ஆகியோரது சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் இன்றையதினம் கு.கமலினி மற்றும் வி.சுப்ரமணி ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வின்போது, துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.