கோலாலம்பூர், ஏப். 23–
மலேசியாவில் கடற்படை தினத்தின் ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது.
மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு நிகழ்ச்சிகான ஒத்திகையின்போது 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த ஒத்திகையின்போது இந்த விபத்து நடந்துள்ளது.
இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்று மற்றொரு ஹெலிகாப்டரின் காற்றாடி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேரை ஏற்றிச் சென்ற எம் 503–3 ரக ஹெலிகாப்டர் ஓடு பாதையில் கீழே விழுந்ததில் ஏழு பேரும் உயிரிழந்தனர். அதேபோல் மூன்று பேரை ஏற்றிச் சென்ற பெனெக் எம் 502–6 ரக ஹெலிகாப்டர் நீச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. உயிரிழந்த 10 பேரும் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.