செய்திகள்

மறைந்த பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

Makkal Kural Official

மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

பொதுமக்கள் அஞ்சலி

மும்பை, அக். 10–

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவையொட்டி இன்று ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் அமித்ஷா பங்கேற்கிறார்.

இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு வயது 86. வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவிய நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.

ரத்தன் டாடாவின் உடல் நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து மும்பை கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

பொதுமக்கள் அஞ்சலி

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக என்சிபிஏ அரங்குக்கு பலத்த பாதுகாப்புடன் ரத்தன் டாடா உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டுள்ளது. ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ரத்தன் டாடாவின் உடல் வோர்லி மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. அப்போது துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது. துக்கத்தின் அடையாளமாக மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இன்று மாநில அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.

முழு அரசு மரியாதை

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ரத்தன் டாடா எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்.

ரத்தன் டாடா கடந்த 1991-ல், டாடா குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம் கணிசமாகவிரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எப்போதும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து ரத்தன் டாடாவின் உடலுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது உடலுக்கு மராட்டிய மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். டாடா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும்.ஒர்லியில் உள்ள டாக்டர் மோசஸ் சாலையில் உள்ள வழிபாட்டு அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும். இதன்பின்பு, தகன பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளது.

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பல்துறை பிரபலங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ரத்தன் டாடாவின் மறைவால், கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார். அவர் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர் மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

பிரதமர்

பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா.

ரத்தன் டாடாவுடன் நான் மேற்கொண்ட எண்ணற்ற சந்திப்புகள் என் மனதில் நிறைந்திருக்கின்றன. நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம். அவருடைய சிந்தனைகள் மிகவும் செழுமையாக இருந்ததைக் கண்டேன். நான் டெல்லி வந்தபோதும் இந்த சந்திப்புகள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது நன்மதிப்பு கொண்டவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் அழியாத முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். இந்தியாவின் உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புடன் ரத்தன் டாடா செயலாற்றினார். அவர் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும், அடையாளமாகவும் இருந்தார். தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார். அவரது அன்புக்குரியவர்களுக்கும், அன்பர்களுக்கும் எமது அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா மறைவுக்கு ஜார்கண்ட் அரசும் ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *