சிறுகதை

“மறப்போம் மன்னிப்போம்!”- கவிஞர் திருமலை. அ

சென்னையில் உள்ள பிரபல கார் கம்பெனியில் கவிதா, பானு ஆகிய இருவரும் விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்தனர்; அதே கம்பெனியில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணி புரிபவர் கண்ணன்.

இவர்கள் மூவரும் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஒன்றாகக் கூடி அரட்டை அடிப்பது வழக்கம்; ஒரு நாள் கவிதாவும் பானுவும் தனியாக இருக்கும் போது கண்ணனை யார் காதலிப்பது? என்ற பேச்சு இருவருக்குள் எழுந்தது; நாம் இருவரும் கண்ணனைத் தனித் தனியாக சந்தித்துப் பழகுவோம்; அவர் யாரை விரும்பினாலும் நாம் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்;

அதன் பிறகு கவிதாவும் பானுவும் கண்ணனைத் தனித் தனியாக சந்தித்துப் பேசத் தொடங்கினார்கள். ஓட்டலுக்கு செல்வது, சினிமா, பீச் என்று ஊர் சுற்றுவது என்று எல்லாமே மாதவி, பானு ஆகியோரின் திட்டப்படியே நடந்தது. இந்த சந்திப்புகள் ஏறத்தாழ 6 மாதங்கள் தொடர்ந்தது;

ஒவ்வொரு சந்திப்பிலும் மாதவியும் பானுவும் தங்கள் காதலின் ஆழத்தை கண்ணனிடம் விவரிக்கத் தவறியதே இல்லை.

ஆனால் கண்ணன் இருவரின் காதலையும் பாரபட்சமின்றி ஏற்றுக் கொண்டான். ஆனால் தனக்கான உண்மைக் காதலி யார்? என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை. இதைப் புரிந்து கொண்டகவிதாவும் பானுவும் இனி கண்ணனை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்;

அன்று கம்பெனிக்கு வந்த கண்ணனை கவிதாவும் பானுவும் ஒன்றாகப் போய் பார்த்தார்கள்; அப்போது கண்ணனிடம் எங்கள் இருவரில் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று கவிதா கேட்டாள்.

அதுதான் எனக்கும் ஒரே குழப்பமாக உள்ளது;

உங்கள் இருவரிடமிருந்தும் எனக்கு ஒரே மாதிரியான அன்பும் பாசமும் கிடைத்ததை எண்ணி நான் வியந்திருக்கிறேன்; எனவே என்னால் யாரை ஒதுக்கி வைக்க முடியும்? அதற்கு நீங்களே ஒரு நல்ல யோசனை சொல்லலாமே? என்று பதில் அளித்தான் கண்ணன்;

அப்படியானால் எங்கள் இருவரையும் விட்டு விடுங்கள்; இனி புதிதாக ஒரு பெண்ணைப் பார்த்து, அந்தப் பெண்ணையாவது உண்மையாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டால் அதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே என்று சர்வ சாதாரணமாக பதிலளித்தாள் பானு;

ஏன் நீங்களே முடிவு செய்து, யாராவது ஒருத்தர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாமே? என்று அவர்களிடம் எதிர் கேள்வி கேட்டான் கண்ணன்;

சரி நீங்கள் சொல்வது போல் செய்தாலும் மீண்டும் இது போல் இன்னொரு பெண்ணின் அன்புக்கும் நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்? என்பதை எப்படி எங்களால் நம்ப முடியும்? ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது உண்மைதானே? என்று பதிலடி கொடுத்தாள் கவிதா.

அதைக் கேட்டு ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல்’ துடித்தான், கண்ணன்; அவர்களோடு நெருங்கிப் பழகியதால் யாரையும் விட்டுக் கொடுக்க அவன் மனம் இடம் தரவில்லை; அப்போது கண்ணன் பேசத் தொடங்கினான். நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஒரு புரிதல் இல்லாமல் எப்படி என் மீது உண்மைக் காதலை வெளிப்படுத்த முடிந்தது? எனவே நீங்களே ஒரு முடிவெடுத்து, உங்களில் ஒருவர் என்னைக் காதலித்திருந்தால் ஒருவேளை அது சரியாக இருந்திருக்கும்; நான் உங்களோடு பழகிய போது ஒரு காதலானாகத் தானே? பழகினேன்; எந்தத் தவறும் செய்யவில்லையே?

பாவத்தை நீங்கள் செய்து விட்டு பழியை என் மீது போடுவது என்ன நியாயம்? ஒருவர் வாழ்க்கையோடு விளையாடுவது எவ்வளவு பெரிய தவறு என்று உங்களுக்குத் தெரிய வில்லையா? இப்போது ‘விளையாட்டு வினையாகி விட்டதே?’ என்று கவிதா, பானு இருவர் முகத்தையும் பார்த்து சரமாரியாகக் கேட்டான் கண்ணன்.

நீங்கள் சொல்வது உண்மைதான்; எங்களை மன்னித்து விடுங்கள், என்று கவிதாவும் பானுவும் கண்ணனை வேண்டினர்.

பரவாயில்லை எனக்கும் அதில் பங்கு இருக்கிறது. உங்கள் இருவரையும் காதலித்த தவறை நானும் செய்திருக்கிறேன்; எனவே நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும் என்று கவிதா பானு ஆகியோரிடம் கண்ணனும் மன்னிப்பு கேட்டான்; இப்போது அவர்கள் மூவர் வாழ்விலும் பலத்த இடி, மின்னல்,மழை தோன்றி மறைந்த அமைதி ஏற்பட்டது;

இனி எப்போதும் போல் நண்பர்களாகவே நாம் இருப்போம்; கடந்த காலத்தை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற அற வழியில் இனி பொறுப்புடன் செயல் படுவோம் என்று கவிதா கூறினாள்; பானுவும் தன் பங்கிற்கு ‘ஓகே’ என்றாள்; கண்ணனும் அதைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டான்;

வேலை நேரம் முடிந்து விட்டதால், மூவரும் தங்கள் கம்பெனிஅருகில் உள்ள ஓட்டலுக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் கல கலப்பாக பேசிக் கொண்டே தங்கள் மாலை டிபனை முடித்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில்லை எடுத்து வந்து வழக்கம் போல் கண்ணனிடம் நீட்டினார்; ஆனால் அதை இடைமறித்து வாங்கினாள் கவிதா; இன்றைக்காவது எங்களைப் பில் கொடுக்க விடுங்கள் என்று கவிதாவும் பானுவும் கண்ணனைக் கலாய்த்தார்கள்.

அப்போது எழுந்த மூவரின் சிரிப்பலையில் அந்த ஓட்டலே அதிர்ந்து போனது!

Leave a Reply

Your email address will not be published.