சிறுகதை

மறதியால் வந்த வினை- மு.வெ.சம்பத்

செழியன், சேரன் இருவரும் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரி படிப்பிற்காக வேறு ஊர்களுக்குச் சென்றதில் இருவரது நெருக்கத்திலும் ஒரு இடைவெளி ஏற்பட்டது.

செழியன் கல்லூரி படிப்பு முடிந்ததும் தனது அப்பாவின் நண்பருடன் சேர்ந்து காண்டராக்ட் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். வேலையிலுள்ள நெளிவு சுளிவு எல்லாம் நன்கு கற்றறிந்த பின் தனது அப்பாவின் நண்பர் திடீரென மரணமடைந்து விட செழியனே கம்பெனியின் முழுப் பொறுப்பையும் ஏற்றான். அரசாங்க காண்ட்ராக் எல்லாம் எடுத்து நல்ல பெயருடன் வலம் வந்தான்.

சேரன் கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மிகவும் கடின உழைப்பால் உயர்ந்துள்ளான். கம்பெனி முதலாளி ஒரு புது கம்பெனி ஒன்று ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் சேரனிடம் ஒப்படைத்தார். கம்பெனி ஈட்டும் லாபத்தில் 20 சதவீத பங்கு உனக்கு என்று அவர் கூறினார். சேரனின் கடுமையான உழைப்பு,தொழிலாளர்களை அன்புடன் நடத்திய விதம், நேர்த்தியான கட்டுமானப் பொருட்கள், குறித்த நேரத்தில் முடிக்கும் பாங்கு இவைகள் கம்பெனிக்கு நல்ல பெயர் மட்டுமின்றி, லாபத்தையும் பெருக்கிக் காட்டியது.

ரொம்ப நாட்கள் சென்று, செழியனும் சேரனும் பள்ளி நண்பன் திருமணத்தில் சந்தித்துக் கொண்டனர். வெகு நேரம் பேசிய பின் செழியன் சேரனிடம் நாம் இருவரும் சேர்ந்து தொழில் செய்தாலென்ன, நன்கு யோசித்துச் சொல் என்றான். சரி சிறிது அவகாசம் கொடு என சொல்லி விட்டு சேரன் புறப்பட்டான்.

செழியனின் இடைவிடாத அழுத்தத்தால் சேரன் தனிக் கம்பெனி ஆரம்பிக்க ஒப்புக் கொண்டான். சேரன் தற்போது வேலை செய்யும் ஊரில் ஒரு கிளையும் ,செழியன் ஊரில் தலைமை அலுவலகமும் என முடிவாகியது. சேரன் தனது முதலாளியிடம் முறைப்படி அனுமதி பெற்று அவரிடம் விவரத்தைக் கூறி விடைபெற்றான்.

இருவரது உழைப்பிலும் கம்பெனி நன்றாகவே ஆலமரம் போல் தழைத்தது. செழியனுக்கு இந்தத் தொழிலிலுள்ளவர்கள் நிறையப் பேர்கள் நண்பரானார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லுவதானால் ராஜதுரை, செல்வம், மணி இவர்கள் செழியனுடன் சில கூட்டுத் தொழிலை மேற்கொண்டனர். இது சேரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அரசாங்க டெண்டர்கள் நிறைய எடுத்து லாபம் ஈட்டினான் சேரன். ஆனாலும் செழியன் தான் அரசு உயர் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களில் கலந்து கொள்வான். ராஜதுரை மற்றும் செல்வம் நாளுக்கு நாள் செழியனுடன் அதிக நேரம் செலவிட்டனர். செழியனின் சில முக்கிய ரகசியங்களை கைப்பற்றும் எண்ணம் அவர்கள் மனதில் நாளுக்கு நாள் வளர்ந்தது. சில பெரிய மனிதர்கள் அறிமுகத்திற்காக சில பார்ட்டிகள் ஏற்பாடு செய்து செழியனை அழைத்துச் சென்றனர். சேரன் செழியனைக் கூப்பிட்டு இதெல்லாம் வேண்டாமெனக் கூற. செழியன் கேளாச் செவியானான்.

செழியனின் தந்தை தனது மகனையும் சேரனையும் அழைத்து நான் உங்களுக்கு பெண் பார்த்து வைத்துள்ளேன். எனது நண்பரின் மகள்கள். இரட்டைப் பிறவி அவர்கள் என்றதும் செழியன் முடித்து விடுங்கள் என்றதும் சேரன் இனிமேலாவது செழியன் திருந்தினால் சரி என தானும் ஒப்புக் கொண்டான். திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.

அன்று தொழிலதிபர் கூட்டத்துக்கு சென்று வந்த செழியன் சேரன் மிகவும் களைப்பாக இருந்தனர்.

நல்ல ஓய்வு தேவையெனக் கூறி இருவரும் படுக்கச் சென்றனர்.

மறு நாள் காலை வெகு நேரம் இருவரும் எழுந்திருக்க வில்லை.அதைக் கண்டு கிட்டப் போய் பார்த்ததில் அவர்கள் இருவரும் என்ன அழைத்தும் பதில் தராமல் இருந்தனர். அதைக் கண்டு உடனே மருத்துவரை அழைத்தனர். அவர் வந்து பார்த்து விட்டு அவர்கள் இறந்து விட்டதாகக் கூறினார்.

உடனே விஷயம் தீ போல் பரவியது.

காவல்துறையினர் வந்தனர். பின் மருத்துவ பரிசோதனையில் அவர்கள் விஷமருந்தியுள்ளதாக தெரிய வந்தது..

பின் காவல்துறை பலவித கோணங்களில் விசாரணை செய்ததில் அவர்கள் விஷம் அருந்தியதாக உறுதி செய்தனர். அவர்கள் வேறேங்கேயாவது ஏதாவது குடித்திருக்கலாம் ஏனென்றால் கூட்டம் நடந்த அந்த ஓட்டல் நல்ல பெரிய நட்சத்திர ஓட்டல் ஆனதால் அங்கு நடக்க சாத்தியமில்லை எனக் கூறி சரியான தடயங்கள் கிடைக்காததால் வழக்கு முடிவின்றி கிடப்பில் போடப் பட்டது.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த வழக்கைப் பற்றி பலவாறான கருத்துக்களை முன்மொழிந்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தி இந்த வழக்கை மறுபடியும் தீர விசாரிக்க விஜயகுமாரை நியமித்தனர். விஜயகுமார் விசாரணையை தொடங்கிய சில நாட்களிளில ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

செழியன் மற்றும் சேரன் உடன் பழகிய ஆட்களை விசாரணை செய்ததில் எல்லோரும் செழியனை புகழ்ந்து பேசினார்கள். நாங்கள் என்றுமே அவரின் நண்பர்கள் என்றனர்.

அன்று நட்சத்திர ஓட்டலுக்கு வந்த விஜயகுமார் சிசிடீவி காமிராவில் அன்று நடந்த கூட்டத்தின் காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்த்தார். ஒரு கட்டத்தில் ஒரு இடத்தில் காட்சியை நிறுத்தச் சொன்ன விஜயகுமார் வெகு நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த ஓட்டலில் வெகு நாளாக வேலை செய்யும் ஒருவரை தன் வீட்டிற்கு அழைத்தார் விஜயகுமார். அவரிடம் வெகு நேரம் பேசியபின் விஜயகுமார் மிகவும் யோசனையில் ஆழ்ந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் காவல்துறையை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் பாராட்டு மழைகளைப் பொழிந்தனர்.

தடையம் உடைந்ததெப்படி எனத் தலைப்பில் போட்டு அசத்தினர்.

ராஜதுரை மற்றும் துரை இருவரும் தொழிலதிபர் வழக்கில் கைதானார்கள். கைதான ராஜதுரையின் வாக்குமூலம் வந்தது.

எனது உண்மையான நண்பன் தான் செழியன். அவர் கூட்டாளி சேரனிடம் எனக்கு அதிக பழக்கம் கிடையாது. ஆனாலும் அவரைக் கண்டாலே எனது மனத்தில் ஒரு வெறுப்பு அவர் மேல் வளர்ந்தது. எனக்கு தனியாக சில வேலைகள் ஒதுக்க செழியனிடம் எவ்வளவு முறை கேட்டும் அவர் மறுத்ததால் மனதில் நாளடைவில் அவர் முன்னேற்றம் கண்டு பொறாமை ஏற்பட்டு தீர்த்து விடுவதென முடிவு செய்து நட்சத்திர ஓட்டலில் உள்ள துரை மூலம் காயை நகர்த்தி பானத்தில் மெதுவாகக் கொல்லும் விஷத்தை கலந்து அவர்கள் இருவருக்கும் தந்து அவர்கள் வாழ்வை முடித்தேன்.

துரையையும் நான் மறைவிடத்தில் தங்க வைத்தேன். முதலில் இந்த வழக்கு கிடப்பில் போட்டதும் மகிழ்ந்தேன். நான் ஓட்டலில் துரையின் நண்பனை மறந்தது தான் என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது. விஜய குமார் தனது புத்தி சாதுர்யத்தினால் துப்பு துலக்கி விட்டார் என்று ஒப்புக் கொண்டார். அவர் வாக்குமூலத்தை பத்திரிகைகள் பக்கங்களில் நிரப்பின.

தன் வினை தன்னை சுடத்தானே செய்யும் என்று கூறிய விஜயகுமாருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published.