சிறுகதை

மர்மம் என்ன? – ராஜா செல்லமுத்து

ஊர் உறவுகளை விட்டு சென்னை மாநகரத்தில் தன் லட்சியப் போராட்டத்தில் வெல்வதற்காக சிவா தன் கையில் எடுத்து இருக்கும் தொழில் ஆக்டிங் டிரைவர் வேலை.

எதற்கு இந்த ஆக்டிங் டிரைவர் வேலையை எடுத்திருக்கிறான் என்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த வேலையிலிருந்து விலகிக் கொள்ளலாம். யார் கூப்பிட்டாலும் அந்தப் பயணம் மட்டுமே. அந்த பயணம் முடிந்தவுடன் தனக்கு சேர வேண்டிய தொகையை வாங்கிக் கொண்டு தன் இலட்சிய பயணத்தில் நடைபெறுவதற்கு தான் சிவா அந்த ஆக்டிங் வேலையை கெட்டியாக பிடித்திருந்தான்.

சென்னை மாநகரத்திற்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் இதுவரை எத்தனையோ ஆட்களுக்கு ஆக்டிங் டிரைவர் வேலை பார்த்தான்.

ஆனால் அவன் வேலை பார்த்த ஒருவர் கூட அதன் அவன் மனதில் நிற்கவில்லை. பஸ்ஸில் ஏறி பஸ்ஸில் இறங்கும் பயணியாக தான் காரில் ஏறி காரை விட்டு இறங்கி ஒரு ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தான் என்பது அவனுக்கு அறிந்த ஒன்றுதான்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னால் அவனுடைய செல்பேசிக்கு ஒரு பெண்மணி அழைத்தார்.

‘‘உங்க பேர் சிவாவா?’’ என்று அந்தக் குரல் கேட்ட போது,

‘‘நான் சிவா தான்’’ என்று எதிர்திசையில் பதிலளித்தான் சிவா.

‘‘டிரைவர் வேணும்னு நான் கேட்டிருந்தேன். உங்க நம்பர் குடுத்தாங்க. வீட்டுக்கு வரமுடியுமா?’’ என்று அந்த பெண்மணி கேட்டபோது

‘‘ஓ….. தாராளமா வர்றேன்’’ என்று சொல்லிய சிவா, அந்தப் பெண்மணியின் வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு பறந்தான்.

எவ்வளவோ நபர்களுக்கு ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தவனுக்கு இதுவும் அப்படித்தான் கடந்து போகும் ஏதோ ஒரு வயதான பெண்மணியையோ? அல்லது ஒரு வயதான கிழவன் தான் ஏற்றிப் போக வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த சிவா அந்த வீட்டில் வெளியே அமர்ந்திருந்தான்.

செல்பேசியில் பேசிய அந்த பெண்மணி வெளியே வந்து, அவனின் முகவரி, ஆதார் கார்டு ஜெராக்ஸ் என்று அத்தனையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

எதற்கு இதெல்லாம் வாங்குகிறார்கள்? என்று நினைத்தான் சிவா.

வீட்டின் போர்டிகோவில் நின்றிருந்த சிமெண்ட் நிறக் காரைத் தொட்டு, ‘‘இதுதான் நீங்கள் ஓட்டிப் போகப் போகும் கார்’’ என்று காரை அறிமுகம் செய்து வைத்தார் அந்த பெண்மணி.

ஓஹோ யாரோ ஒரு பெரியவர்களைத் தான் நாம் ஏற்றிப் போகிறோம்? என்று தானே நினைத்துக் கொண்டான் சிவா.

அங்கே தேவதை போல ஒரு பெண் தென்றலோடு நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் இடுப்பை விட்டு இறங்கிய தலைமுடி, அவள் பாதங்களைப் பரவசப்படுத்தியது போல இடது வலது, வலது இடது என்று கூந்தல் ஆடிக் கொண்டே வந்தது. அந்த தேவதையைக் கண் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

ஏதோ வெளியே போக போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. காரைத் திறந்து கொண்டு அந்தத் தேவதை உள்ளே ஏறினாள்.

ஆணி அடித்தது போல் நின்று கொண்டிருந்த அவனது கால்கள் அனிச்சையாக காருக்குள் ஏறி இறங்கி திருப்பியது.

‘‘எங்க போகனும்?’’ என்று கேட்டபோது, மலரினும் மெல்லிய இதழ்களைத் திறந்து அவள் போகும்போது வழியைச் சொன்னாள்.

அதுவரையில் அந்த காருக்குள் சுகந்தம் வீசாத அந்தப் பகுதி, அவள் ஏறியதும் அந்த வாசனை காரை தூக்குவது பாேல் வந்து கொண்டிருந்தது.

முகக்கவசம் அணிந்து இருந்த சிவாவின் நாசிக்குள் அழகாக அவளின் அத்தர் வாசம் நுழைந்தது.

டிரைவர் சீட்டுக்கு மேலே இருந்த அந்த சதுரக் கண்ணாடியில் அமர்ந்திருந்த தேவதையை ஓரக்கண்ணால் பார்த்தான். செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள் அந்த தேவதை.

வெறும் வார்த்தைகளில் அவளை வர்ணித்து விட முடியாது. அந்த வார்த்தைக்கு அச்சு அசலாகவே கொண்டிருந்தாள் தேவதை.

சின்னதாக நெற்றியில் ஒரு பொட்டு. இடப்பக்கம் வலப்பக்கம் என்று இரண்டு ஹேர் பின். மல்லிகை, ஜாதிமுல்லை என்று இரண்டும் கலந்த பூக்கள் என்று அவள் ஏறியது, முதல் அந்தக் கார் புஷ்ப பல்லக்காக மாறிப் பறந்து கொண்டிருந்தது.

பேசலாமா? வேண்டாமா? என்று சிவாவுக்கு ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது.

எதற்கு வம்பு நாம் செய்ற வேலையை மட்டுமே செய்து விட்டு போகலாம். இன்று ஒரு நாள்தான் வரப் போகிறோம். நாளை இவர்கள் யாரோ நான் யாரோ என்று தானே போகப் போகிறோம் என்று சிவா தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அந்தப் பெண் சொன்ன முகவரிக்கு காரை செலுத்திக் கொண்டிருந்தான். இடது புறம் வலது புறம் என்று கார்கள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் அந்தத் தார்ச் சாலையில் தேவதையை சுமந்து கொண்டு அந்த பூப்பல்லக்கு போய்க்கொண்டிருந்தது.

சென்னையிலிருந்து 24 கிலோமீட்டர் இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அந்தக் கார் விரைந்தது. கல்லூரி வளாகம் வந்ததும் தன்னுடைய தோள் பை உணவு என்று அத்தனையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள் அந்த தேவதை.

என்ன பெயராக இருக்கும்? என்று அவனுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது.

அப்போது எதேச்சையாக அவள் அமர்ந்திருந்த இருக்கையைக் கவனித்தபோது, அவளின் ஐடி கார்டு அங்கு இருப்பதை அவன் கவனித்தான்.

அதை எடுத்துப் பார்த்தபோது, அந்த தேவதையின் பெயர் “பிரியா” என்பதை அறிந்து கொண்டான். அவளின் புகைப்படம் அவளின் முகவரி என்று இருந்த அந்த ஐடி கார்டு பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த தேவதை அவன் முன்னால் வந்ததை அவன் கவனிக்கவில்லை.

ஹலோ என்று மல்லிகை மணம் வீசும் மெல்லிய குரலில் கூப்பிட்டாள். திரும்பிய சிவா அவளைப் பார்த்ததும் திகைத்துப் போய் நின்றான்.

அவள் தன்னுடைய ஐடி அட்டையைக் கேட்டாள்.

சாரி நீங்க மறந்து வச்சுட்டு போய்ட்டீங்க என்று நாணம் கலந்த குரலில் சொன்ன போது, சின்னப் புன்னகை மட்டும் சிந்தி விட்டு தன்னுடைய ஐடி கார்டை எடுத்துக் கொண்டு வேகமாக பறந்தாள் பிரியா.

அவள் நடந்து போகும்போது தென்றலும் அவள் கை பிடித்து நடப்பது போல அவ்வளவு நளினமாக நடந்து போய்க் கொண்டு இருந்தாள்.

அன்று அவள் வகுப்பு முடியும் வரை அந்த மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக் கொண்டிருக்க கூடிய நிலைமை ஏற்பட்டது. ஒரு பக்கம் எரிச்சல், இன்னொரு பக்கம் கோபம், இன்னொரு பக்கம் ஆற்றாமை என்று இருந்தாலும் ஒரு தேவதையை இதுவரை சந்திக்காத ஒரு பெண்ணை சந்தித்தது எவ்வளவு நேரம் செலவழித்தால் என்ன என்பது போல் அவனுக்கு இருந்தது.

ஒரு மணி நேரத்தைக் கூட ரணப் பொழுதாக கழிக்கும் சிவாவுக்கு அன்றைய பகல் பொழுது முழுதும் மகிழ்ச்சியாக இருந்தது.

காரணம் தேவதையைக் காவல் காக்கும் ஒரு காவலாளி ஆகவே தன்னை வரித்துக் கொண்டான் சிவா.

இன்று ஒரு நாள்தான் நம்மை அழைப்பார்கள். மறுநாள் நம்மை கூப்பிட மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு அவளை ஏற்றிக் கொண்டு இங்கு அந்தத் தேவதை ஏறிய அதே வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டான். அன்றைய கூலியை பிரியாவின் அம்மா கொடுத்துவிட்டு நன்றி என்று சொன்னார். பதிலுக்கு சிவாவும் நன்றி என்று சொல்லிவிட்டு விடை பெற்றான்.

இனி மறுபடியும் அந்த தேவதையைப் பார்க்க முடியுமா? என்பது அவனுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவரை அவன் சந்தித்த சந்தித்திராத ஒரு அழகு இதுவரை அவர் சந்தித்திராத ஒரு மௌனம். இதுவரை அவன் பார்த்திராத ஒரு பெண் . ஒரு ஓவியத்தைப் போல இருந்த அந்தப் பெண்ணின் முகம் அவன் மனதில் அச்சு போல் ஒட்டிக் கொண்டது. இரவு முழுவதும் அந்த முகத்தை கண்ணுக்குள் இருத்திக் கொண்டு எப்போது தூங்கினான் என்று தூங்காமலே இரவில் தூங்கினான்.

அந்த அதிகாலையில் அவனின் செல்போன் சிணுங்கியது. அதே பெண்மணி தான் சிவாவைக் கூப்பிட்டாள்.

அவள் கூப்பிட்டபோது அவனுக்கு பத்து இறக்கைகள் முளைத்தது போல பறந்து கொண்டிருந்தான்.

‘‘நான் சிவா தான்’’ என்று சொன்னான்.

‘‘இன்னைக்கும் வரீங்களா?’’ என்று அந்தப் பெண்மணி கேட்டபோது அவனுக்குள் ஆயிரம் இறக்கைகள் கட்டி பறப்பது போல இருந்தது. ‘‘உடனே வருகிறேன்’’ என்று சொல்லி அவன் அடுத்த இருபது நிமிடத்தில் அவர்கள் வீட்டில் இருந்தான்.

மறுபடியும் அந்த தேவதை தான் அந்த பல்லக்கில் ஏறி அமர்ந்தாள்.

அவனுக்குள் ஒரு புதுவித மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாள் அந்த தேவதை.

இதற்கு முன்னால் எந்த ஒரு பெண்ணும் அவன் மனதில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. எவ்வளவோ பெண்களைக் கடந்து இருந்தாலும் பிரியா ஒரு விசித்திரம்.

இப்படியாக அந்தப் பெண்ணிற்கு தினமும் கார் ஓட்டி ஓட்டி ஒருவழியாக அந்த வீட்டிற்கு மாத சம்பளம் இல்லாத ஒரு ஊழியனாகவே மாறினான் சிவா.

முன்பெல்லாம் பிரியாவின் மீது எரிச்சல் பட்டுக் கொண்டிருந்த சிவாவிற்கு இப்போதெல்லாம் இரவிலிருந்து பகல் முழுவதும் அவள் உடனே இருக்க வேண்டும் என்ற ஒரு பூரிப்பு ஏற்பட்டது.

அது காதலா ? இல்லை வேறு எதுவுமா? என்று அவனுக்கு ஒரு இனம் புரியாத ஒரு குழப்பம். சொல்லலாமா வேண்டாமா? என்று ஒரு தயக்கம். அவனுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

பிரியாவும் காரில் ஏறினால் பேசுவதில்லை. சிவாவும் காரிலிருந்து பேசுவதில்லை. அவர்கள் இருவருக்குமான மௌனத்தில் காதல் மேடை போட்டு இருந்தது.

இருவரில் யார் முதலில் தங்கள் காதலைச் சொல்வது? என்று தங்களுக்குள் அடைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவள் ஏதாவது இனிப்போ காரமோ சாப்பிட்டால் அதை வண்டியில் வைத்து விட்டு செல்வாள். அதைக் கவனிக்கும் சிவா எதற்கு வம்பு என்று சாப்பிடாமல் விட்டுவிடுவான். சில நேரங்களில் சாப்பிட்டு தான் பார்ப்போமே? என்று சாப்பிட்டு மீதம் வைத்து விடுவான். அவள் எச்சிலை அவனும் அவன் எச்சிலை அவளும் மாறி மாறி சாப்பிடும்போது காதல் கட்டியம் கூறியது .

இப்படியாக போய் கொண்டு இருக்கும் நாட்களில் போர்டிகோவை விட்டு அவன் ஒருநாளும் உள்ளே போனது இல்லை. அதிகாலையில் வாசலில் நின்றிருக்கும் காரை எடுப்பது வகுப்பு முடிந்த பிறகு காரை வீட்டுக்கு விடுவது என்று அவன் காலடி படிகளில் பட்டதில்லை.

ஒரு நாள் அந்தப் பெண்மணியின் அம்மா, ‘‘தம்பி வீட்டுக்குள்ள வாங்க’’ என்று அழைத்தாள்.

என்ன என்னைக்கும் இல்லாம அந்தம்மா வீட்டுக்குள்ள கூப்பிடுறாங்க என்று உள்ளே நுழைந்த சிவாவிற்கு ஆச்சாரமான அந்த குடும்பத்தின் அப்பழுக்கற்ற அந்த வீட்டின் அமைதி பிடித்திருந்தது. கடவுள் குடியிருக்கும் கருவறை கோயிலாகவே அந்த வீடு இருந்தது. உள்ளே கூட்டிப் போன அந்தப் பெண்மணி செல்பின் மேலே காண்பித்து ‘‘தம்பி மேலே… அங்கு… செல்போன் இருக்கு. எடுத்துத் தர முடியுமா?’’ என்று கேட்டாள்.

‘‘அதற்கு என்ன’’ என்ற சிவா அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு அதன் மேலே ஏறி மேலே இருக்கும் அந்த செல்போனை எடுத்துக் கொடுத்தான். பக்கவாட்டில் அவன் திரும்பியபோது அந்தத் தேவதை பஞ்சு மெத்தை படுக்கையில் அமர்ந்துகொண்டு சிவாவை கண் வைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்குள் ஒரு சின்ன மர்மம் முளைத்தது. செல்போனுக்கு கைகால்கள் இல்லை. அது எப்படி மேலே பறந்து போயிருக்கும். அதை யாரோ தானே வைத்திருக்க முடியும். சரி அப்படி வைத்திருந்தாலும் அவர்கள் வீட்டில் ஆட்கள் இல்லையா? ஏன் நம்மை அழைத்து வீட்டுக்குள் இருக்கும் செல்போனை எடுத்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும். இதில் ஏதோ மர்மம் முளைந்திருக்கிறது என்று சிவா நினைத்தான்.

அந்த செல்போனை வாங்கிய அந்தப் பெண்மணி, ‘‘இந்தா இப்பப் பத்தரமா வச்சிக்க’’ என்று பிரியாவிடம் கொடுத்தபோது அவள் சன்னமாக சிரித்துக் கொண்டு செல்போனை வாங்கினாள்.

அன்று காலை சிவா உடுத்திய உடை பாேல ஒரே கலரில் அவளின் உடை இருந்தது. அவன் அவன் மர்மத்திற்கு ஒரு விடை கிடைத்ததாக நினைத்தான்.

அவன் அணிந்திருக்கும் உடை போலவே தினமும் அவள் உடை அணிந்து வருகிறாள்.

ஆனால் கண்ணியமும் தான் செய்யும் வேலையில் தொழில் பக்தியுடன் இருக்கும் சிவாவால் அவனின் மனதில் இருக்கும் காதலை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

ஏதாவது சொன்னால் ஏற்றத் தாழ்வு ஏதாவது நிகழ்ந்துவிடுமோ? என்ற அச்சம் அவனுக்குள் இருக்கிறது.

உயர்ந்த இடம், மருத்துவப் படிப்பு; நாமோ சாதாரணமான ஒரு ஓட்டுநர் தான். இந்தப் பாகுபாடுகள் அவள் மனதில் இருந்தால் நம் காதல் கலங்கிவிடும் வேண்டாம். அவளுக்கு எப்போது மனது இருக்கிறதோ? அப்போது சொல்லட்டும். அதுவரையில் தேன் கூட்டைக் காவல் காப்பது போல நாம் காதலை காத்திருப்போம் என்று அவன் உள்ளுக்குள் வேர்விட்டு வளர்ந்து கொண்டிருக்கும் காதலை வெளியில் காட்டாமல் ஓட்டுநர் ஆகவே ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

அவள் ஒவ்வொரு முறையும் காரில் ஏறும்போது, காரின் மத்தியில் இருக்கும் கண்ணாடியில் அவனைப் பார்ப்பதும் சிரிப்பதும் காருக்குள் அமர்ந்து சேஷ்டைகள் செய்வது என்று அவளின் கல்லூரிப் பயணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சிவாவின் கண்ணியம் மிகுந்த நடவடிக்கை காரின் சக்கரங்களைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த காதலின் தூரம் எதுவரை என்று சிவாவுக்கும் தெரியாது. பிரியாவிற்கும் தெரியாது.

ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் காதலை ஒருவருக்கு ஒருவர் யார் வெளிப்படுத்த போகிறார்கள் என்பதில்தான் விடியல் இருக்கிறது.

அதுவரையில் அந்த மர்மத்திற்கான விடை வெளியில் வரப் போவதில்லை.

அந்தச் தார்ச்சாலையில் இரண்டு இதயங்களின் சொல்ல முடியாத காதலை சுமந்து கொண்டு தினமும் போய்க் கொண்டும் வந்தும் கொண்டும்தான் இருக்கிறது அந்த சிமெண்ட் கலர் கார்.

இருவருக்குமான அந்த மர்மம் என்ன?

காலம் பதில் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *