ஐதராபாத், ஏப். 14–
ஆந்திர பிரதேசத்தில் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான நிலையில்12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டிகுத்தேம் பகுதியில் உள்ள மருந்து உற்பத்தி மையத்தின் 4வது அலகில் நேற்று இரவு 18 பேர் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த 4 தீயணைப்பு வாகனங்கள், விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடி, 2.30 மணி நேர போராட்டத்திற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
6 பேர் பலி
இந்த தீ விபத்தில் 5 பேர் உள்ளேயே நெருப்பில் பொசுங்கி பலியான நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியாகி உள்ளார். இதில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். பலியான 6 பேரில் 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன், 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம், லேசாக காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.