கடலூர், நவ. 20–
மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பமானார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா தெரிந்து கொள்ள அமுதா விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்கு சென்றார். அங்கிருந்த மருந்தக உரிமையாளர், அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து, பெண் சிசு இருப்பதாக கூறினார். 3வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மருந்தகத்திலேயே கருவை கலைப்பதற்கான மாத்திரைகள் அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்ட அவர், வேப்பூர் அருகே நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 நாள் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அமுதாவை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அமுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.