சிறுகதை

மருத்துவ சோதனை | ராஜா செல்லமுத்து

“விதைத்தது எதுவோ?

அதையே அறுவடை செய்கிறாய்…”

நாற்பது நாளுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த கருப்பணன், இன்று வீட்டிற்கு போக அனுமதிக்கப்பட்டார்.

“டாக்டர்….., அப்பாவுக்கு…..? என்று இழுத்த மகன் ஞானத்தின் கையைப் பிடித்த மருத்துவர்

‘‘ ஒண்ணுல்ல, அவ்வளவுதான் வயசாயிடுச்சில்ல. இவ்வளவு நாள் ஹாஸ்பிட்டல்ல வச்சு பார்த்தாச்சு. எவ்வளவு மருந்து மாத்திரைகள் குடுத்தாலும் உடம்பு ஏத்துக்கிற மாட்டேங்குது. இனிமே வச்சு பிரயோசனமில்ல. அவர வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி நல்லா சாப்பிட வையுங்க. என்ன கேக்குறாரோ அத இல்லன்னு சொல்லாம வாங்கிக்குடுங்க. அவ்வளவு தாங்க மனுசன் வாழ்க்கை. இதுக்கு போயி, ஏன்? என்று அரைகுறையாகப் பேசிய மருத்துவர், அன்றே கருப்பணனை, மருத்துவமனையிலிருந்து கூட்டிப் போக அனுமதித்தார்.

இதைக் கேட்டதும் ஞானத்தின் கண்கள் குளமாயின.

அவரை நிமிர்ந்து பார்த்த மருத்துவர் எதுவும் பேசாமலேயே, தட்டிக் கொடுத்து சென்றார். ” அப்பா” … ஞானத்தை அறியாமலேயே அவனின் உதடுகள் தந்தியடித்தன. மருத்துவப் படுக்கையில் சதைக்குறைந்து சுருண்டு கிடந்த கருப்பணனை அப்படியே அள்ளித் தூக்கி வைத்து ஆம்புலன்சில் ஏற்றினர் மருத்துவமனை ஊழியர்கள்.

தொண்டைக்கும் வயிற்றுக்குமான இடைவெளியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

எவ்வளவு கம்பீரமான மனுசன் இப்பிடி? உடன் வந்த உறவினர் கருப்பணனைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினர். கருப்பணன் வீட்டுக்கு வரும் தகவல் சொல்லப்பட்டது.

அவருக்கான இடம் ஒதுக்கப்பட்டு, இங்கு அப்பாவ போட்டுரலாமா? என்று ஞானத்தின் தங்கை சொல்ல அவள் பேச்சை எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

என்ன, என்னைய எல்லாரும் அப்பிடி பாக்குறீங்க?

” இல்ல, நீ அப்பாவ இங்க போட்டுரலாம்னு சொன்னயா? அதான் எங்களால தாங்க முடியல என்று உறவுகள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் சொய்ங்…சொய்ங் … என்ற ஆம்புலன்ஸ் சத்தத்தோடு வீடு வந்து சேர்ந்தார் கருப்பணன்.

நடக்கவே முடியாத நடுக்கத்தில் தடுமாறியவரை, கைத்தாங்கலாகத் தூக்கி அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கிடத்தினார்கள்.

“அப்பா” இப்ப எப்படியிருக்கு? கேட்டதும்

“ம்ம்” என்று சன்னமாய் உதடு திறக்காமலேயே பேசினார் கருப்பணன்

சாப்பிட ஏதாவது வேணுமா?

“வேணாம்” என்று தலையாட்டினார்.

“சாப்பிடுங்கப்பா” என்று குடும்பமே சொன்னது கூட அவரின் காதுக்குப் போய் சேரவில்லை.

அவரின் கடைக் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

ஞானம் மட்டுமே உடைந்து போய் உட்கார்ந்திருந்தான்.

“தம்பி, தம்பி,” என்று ஞானத்தை ஒருவர் கூப்பிட,

“ம்ம்” என்றான் நனைந்த கண்களுடன்

“சொல்லி விட்டுருப்பா”

” எங்கே?” என்று ஞானம் கேட்க

“சொந்த பந்தங்களுக்கு” என்றவரின் கண்களும் பணிக்கத் துவங்கியது.

அன்று, நிறைந்த அமாவாசை. முழு நிலாவை , முழு இரவு முழுமையாக மறைத்திருந்தது.

ஊ…. ஊ…. என்று ஊளையிடும் நாயின் சத்தம், கருப்பணனின் இறப்பை உறுதி செய்கிறதோ?

அதுவரையில் சின்ன சின்ன செருமல்களோடு இருந்தார் கருப்பணன். முன்னிரவு முடிந்து. நடு நிசியைத் தொடும் நேரம். ஒரு பெருமூச்சை விட்டார்.

” அப்பா என்னாச்சு? என்று ஞானம் முதற்கொண்டு கருப்பணனைச் சுற்றிச் சூழ்ந்தனர் உறவினர்கள்.

கண்கள் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தவர் சுற்றியிருப்பவர்களைச் சுற்றிச் சுற்றி பார்த்தார். அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு உருண்டு வந்து தொண்டையை நிறைத்தது. கொர் கொர் என்ற உறுமல் சத்தத்தோடு கூடிய ஒரு விதமான மூச்சுக் காற்று, மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே வந்தது. கொஞ்ச நேரம் அப்படி அடித்துக் கொண்டிருந்த கருப்பணனின் பெருமூச்சு ஒரு கட்டத்தில் சட்டென்று நின்றது “ஞானம்” அப்பாவுக்கு என்று ஒருவர் சொல்ல

என்னாச்சு?

“அப்பா போயிட்டாரு”

” எப்படி சொல்றீங்க? என்று ஞானம் கேட்க,

“மூச்சு நின்னு போயிருச்சு”

அத எப்படி நீங்க சொல்றீங்க? இத டாக்டர் சொன்னா தான் நான் நம்புவேன். அப்பா மயக்கமா கூட இருந்திருக்கலாமில்லையா? என்று வாதம் செய்தான் ஞானம்.

“ஓ, அப்படின்னா, ஒரு டாக்டர வரச் சொல்லி சர்டிபிக்கேட் குடுக்க சொல்லுங்க என்று ஒருவர் சொல்ல அந்தப் பகுதியிலுள்ள ஒரு மருத்துவருக்குத் தகவல் தரப்பட்டது.

“அப்படியா? ஓ… அங்க, நான் வரனும்னா 5000 ரூபாய் வேணும்

என்னது ஐயாயிரமா?

“ஆமாங்க, நான் அங்க வரணுமில்ல, டெத்த கன்பார்ம் பண்றதுக்கு தான் என்று பிடிவாதம் பிடித்தார் அந்த மருத்துவர், கொஞ்சம் குறைக்கக் கூடாதா?

“இல்லீங்க, இதுவே குறைச்சுதான் சொல்லியிருக்கேன் என்ற மருத்துவர். நேரே வீட்டிற்கு வந்து கருப்பணனைப் பரிசோதனை செய்தார்.

“ஆமாங்க எறந்துட்டார் என்று சொல்லிவிட்டு 5000 ரூபாயை வாங்கிக்கொண்டு புறப்பட்டார் மருத்துவர்.

மனுஷங்கள காப்பாத்துறதுக்கு தான் காசுன்னா இங்க என்னாடான்னா செத்துப் போறத சொல்றதுக்கும் பணமா? என்று பதைபதைத்தனர் மக்கள்.

பணத்தை வாங்கிக் கொண்டு போன மருத்துவர் சில நாட்களில் இறந்து போனார்.

ஆனால் அவர் இறந்தது தற்செயலானது அல்ல. இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்று இறப்பு சான்றிதழ் தர மறுத்தனர் மருத்துவர்கள். அவரின் பூதவுடலைப் புதைக்காமல் இன்னும் அப்படியே வைத்திருந்தனர். இறப்புச் சான்றிதழ் தர சோதனை செய்ய வேண்டுமென்று தள்ளி வைத்துக் கொண்டே இருந்தனர். அவரின் பூத உடல் அப்படியே இருந்தாலும் உயிர் பிரிந்ததற்கான ஆதாரம் வேண்டுமென்று இன்னும் இன்னும் இறப்புச் சான்று தராமலே இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *