தலையங்கம்
இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள், திறமையான மருத்துவ நிபுணர்கள் மற்றும் குறைந்த செலவில் உயர்தர சிகிச்சைகள் போன்ற காரணங்களால், சர்வதேச நோயாளிகளில் 25% பேர் தமிழ்நாட்டைத் தேடி வருகின்றனர். குறிப்பாக, பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், இதயவியல் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சைகள் போன்ற மேம்பட்ட மருத்துவ நடைமுறைகளுக்காக தமிழ்நாட்டை நாடுகின்றனர்.
“தமிழகத்தில் ஆரோக்கியம்”
இந்த மருத்துவ சுற்றுலா சேவைகளை மேலும் மேம்படுத்தவும், நெறிப்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், நவீன சிகிச்சை வசதிகள், ஒழுங்குமுறை மேம்பாடுகள் மற்றும் ஆயுர்வேதம், சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை அடங்கும்.
“தமிழகத்தில் ஆரோக்கியம்” போன்ற திட்டங்கள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம், தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா துறையில் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, “தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு 2025” என்ற இரண்டு நாள் மாநாடு மற்றும் கண்காட்சி மாநாடு ஏப்ரல் 4, 5–ந் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், மருத்துவ சுற்றுலாவின் பாதுகாப்பு, தரம், செலவு மற்றும் மருத்துவ சிறப்பை மையமாகக் கொண்டு, B2B கூட்டங்கள் நடத்த முடிவானது. மேலும், சுகாதார காப்பீடு, சுகாதார வசதியாளர்களின் பங்கு மற்றும் மருத்துவ சுற்றுலா வளர்ச்சிக்கான அரசின் பங்களிப்பு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாடு, உலகெங்கிலும் உள்ள பங்குதாரர்களை, அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள், நல்வாழ்வு மையங்கள் மற்றும் ஆயுஷ் மையங்களுடன் ஒன்றிணைக்கும் ஒரு தளமாக அமையும். இதன் மூலம், இந்திய சுகாதார சேவைகளை உலக அளவில் மேம்படுத்துவதோடு, சுகாதார துறையில் பல்வேறு வணிக வாய்ப்புகளை உருவாக்கவும், நாடுகளுக்கு இடையே நீடித்த கூட்டாண்மையை ஏற்படுத்தவும் முடியும்.
இந்த மாநாடு தமிழ்நாட்டின் மருத்துவ சுற்றுலாத் துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()





