தலையங்கம்
சென்னை கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அண்மையில் நிகழ்ந்த மனதை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓரு நோயாளியின் குடும்பத்தினர், மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், இவ்வாறான தாக்குதல்கள் நாளடைவில் அதிகரித்து வருவதை கவலைக்குரியதாகக் கூறுகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவோரின் மனநிலைதான் இவ்வாறான செய்கைக்கு அடிப்படையாக உள்ளது. நோயாளிகளின் குடும்பத்தினர் அதிகம் நேரம் எதிர்பார்த்தாலும் மருத்துவ உதவி விளங்காத சூழல் உருவாகும் போது பிரச்சனைகள் தீவிரமடைகின்றன.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இரண்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் நடந்து வருவதால் குறுக்கிடும் நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளன.
மருத்துவமனைகளின் சேவை தரம், தகவல் தொடர்பு மற்றும் நோயாளிகளின் எதிர்பார்ப்புகளைச் சந்திக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. தனியார் மருத்துவமனைகள் குறைந்த காத்திருப்பு நேரத்தால் நோயாளிகளுக்கு ஈர்ப்பாக இருக்கும் போதும் அவற்றின் அதிகக் கட்டணங்கள் சமூகத்தின் மேல்மட்டத்துக்கு மட்டுமே அனுபவிக்க கூடியதாக இருக்கின்றன.
அதேசமயம், அரசு மருத்துவமனைகள் அளவுக்கதிகமான நோயாளிகளைச் சந்திக்க நேரம், இடம், மற்றும் பணியாளர்கள் குறைபாடுகளைச் சமாளிக்க முயற்சிக்கின்றன. நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான ஆலோசனைகள், பரிந்துரைகள் ஆகியவை தவறவிடப்படுவதால் மன அழுத்தமும் தவறான முடிவுகளும் ஏற்படுகின்றன.
“அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். “இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது எண்ணம் புரிகிறது, மருத்துவமனைகளில் வருவோர் நோய்பாதிப்பால் அவதிபடுவார்கள், அல்லது மரண கட்டத்தில் தவித்துக் கொண்டு இருப்போரின் குடும்பத்தார் பரிதவிப்புக்கு காரணம் உண்டு !
அரசு மருத்துவமனைகள் அதிக சக்திவாய்ந்த வழிகாட்டி முறைகளுடன் செயல்பட வேண்டிய அவசியம் தற்போது அதிகமாகவே உள்ளது.நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய தகவல்கள் வழங்குவதற்காக தனியொரு பொறுப்பாளர் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் யார் பொறுப்பு மற்றும் அவரை தொடர்பு கொள்ள உரிய போன் எண்களும் கொண்ட ஓர் அறிவிப்பு பலகை அமைத்தால் பல சிக்கல்கள் தவர்க்கப்படும் என்பதை பற்றி தமிழக அரசு யோசித்தாக வேண்டும்.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு முறைமைகள் சிறப்பாக அமைய வேண்டும்.
கட்டணம் மற்றும் சேவைகளின் விவரங்களை முறையாக முன்கூட்டியே அறிவிப்பது அவசியம்.
மருத்துவர்களின் பாதுகாப்பு, நோயாளிகளின் மனநிலை மற்றும் மருத்துவமனைகளின் திறனான செயல்பாடுகளை சமன்செய்யும் வழிகள் தேவை. இதற்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட வேண்டும். சமூகத்தின் ஒத்துழைப்பும் பொறுப்பும் இவ்வாறான நிகழ்வுகளைத் தடுக்க மிக முக்கியமானதாகும்.