அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்
திருப்பதி, ஜன. 5–
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்திக்க வரக்கூடாது என அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு வந்த அல்லு அர்ஜூனை காண ரசிகர்களின் கூட்டம் முண்டியடித்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் மெல்ல மெல்ல தேறி வருகிறது.
இறந்துபோன பெண்ணின் கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். ஒருநாள் சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார்.
இதனிடையே, அல்லு அர்ஜூன் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சிகிச்சையில் உள்ள ஸ்ரீதேஜை பார்க்க இன்று நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தார்.
சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராம்கோபால்பேட்டை போலீசார் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்திக்க வரக்கூடாது. அப்படி போலீசாரின் எச்சரிக்கையை மீறி வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என அதில் கூறியுள்ளனர்.