கை கால்கள் விறைத்துப் போகும் மார்கழிப் பனியிலும் மதன் அதிகாலையில் எழுந்து நடுங்கும் குளிரில் வேர்வையில் குளித்தபடி ஓடுவான்.
எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் .அவன் நினைத்திருந்தால் பணம் கொழிக்கும் படிப்பைப்படித்து கை நிறைய சம்பாதித்து இருக்கலாம்.
ஆனால் அவன் ஒரு சேவை நோக்கத்திற்காக மட்டுமே இப்போது சென்னையில் தங்கியிருக்கிறான் .
ஐந்து பேர்கள் கொண்ட அறை. ஒருவருடன் ஒருவர் ஒட்டி உரசி முட்டி மோதி படுத்து உறங்கும் சிறிய அறை. சமையல் என்பதெல்லாம் அந்த அறையில் கிடையாது.
கையேந்தி பவன் தான் அவர்களுக்கு சொர்க்கபவன். எப்போது எழுவார்கள்; எப்போது இரவில் விழுவார்கள்; என்பது இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு தான் வெளிச்சம்.
மதன் ஒரு மருத்துவப் பிரதிநிதி. மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கும் மருத்துவர்களுக்கும் இடையே பாலமாக இருப்பவன்.
மதனுக்கு மருத்துவக் கம்பெனி தான் சம்பளம் கொடுக்கிறது என்றாலும் அந்த மருந்து மாத்திரைகளை மருத்துவரிடம் கொண்டு சேர்ப்பது தான் பணி.
முன்பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மத்தியில் டிப் டாப்பாக இன்சர்ட் செய்யப்பட்ட முழுக்கை சட்டை அயன் செய்யப்பட்ட பேண்ட். கையில் தோள் பை சகிதம் வைத்துக் கொண்டு அந்த நோயாளிகளுக்கு இடையே அமர்ந்திருக்கும் தோரணையே மதன் நோயாளி இல்லை என்பதைக் காட்டும்.
மருத்துவமனையிலிருக்கும் நோயாளிகளுக்கு எந்த மாதிரியான நோய்கள் வந்திருக்கும் இவர்களுக்கு என்ன மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.
ஆனால் இவர்களின் எல்லா நோய்களும் சீக்கிரத்தில் குணமாக வேண்டும் என்று தான் மருந்து மாத்திரைகளின் மாதிரிகளுடன் அங்கே அமர்ந்திருப்பான் மதன்.
பிசியாக இருக்கும் மருத்துவர்கள் என்றால் முன்னேபதிவு செய்ய வேண்டும் அல்லது அதிகாலையில் பதிவு செய்ய வேண்டும்.
அப்படிப் பதிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விட்டு விட்டு பணத்தை மட்டுமே குறிக்கோளாக நினைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் நோயாளிகள் எல்லாம் பார்த்து விட்டு தான் மருத்துவ பிரதிநிதிகளை அழைப்பார்கள்.
ஒரு சில மருத்துவர்கள் பிரதிநிதிகளின் காத்திருப்பைக் கணக்கில் கொண்டு கருத்தில் கொண்டு உடனே உள்ளே வரச் சொல்லுவார்கள்.
படித்த மருத்துவர்களிடம் தங்கள் கொண்டு வந்த மருந்து மாத்திரைகளின் பயன்பாடு. நோயாளிகளுக்கு எவ்வளவு தூரத்திற்கு அது உதவி செய்கிறது.மருந்துகளின் விலை என்று அத்தனையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.
தலையாட்டும் மருத்துவர்கள் அதனைத் தேர்வு செய்து நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தயாரிக்கும் மருந்துகளுக்கு மகத்துவம் ஏற்படும்.
நோயாளிகள் நோயின்றி வாழ வேண்டும் என்பதுதான் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் குறிக்கோள் .இதுவே மருத்துவப் பிரதிநிதிகளின் எண்ணமும் கூட.
அப்படி அந்த காத்திருத்தல் கூட அந்த பிரதிநிதிகளுக்கு கசப்பை கொடுத்தாலும் நோயாளிகளுக்கு இந்த மருந்து மாத்திரைகள் புதுவிதமான ஒரு உணர்வைத் தரும் அவர்களுக்கு நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று மதன் தனக்குள் மகிழ்ந்து கொள்வான் .
மருத்துவமனையில் ஒரு டாக்டர் மதனை உள்ளே அழைத்தார்
தம்பி நாங்க மருத்துவத்துக்கு படிச்சிருப்போம். பணம் சம்பாதிக்கிறோம். இங்க இந்த மருந்துகளை கொண்டு வர்ற உங்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும்? என்று கொஞ்சம் சீரியஸ் ஆக கேட்டார் அந்த மருத்துவர்
சார் உண்மையச் சொல்லனும்னா இங்க சம்பளத்தை விட ஒரு சேவையா பாக்கிறோம். மார்க்கெட்டுக்கு வர்ற மருந்துகளை உங்ககிட்ட கொடுக்கும் போது அதை நீங்க நோயாளிக்கு பயன்படுத்துறீங்க. அதனால உசுரு பிழைக்கிறது சார். அதுதான் எங்களுக்கு சம்பளம் என்றான் மதன்.
அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த அந்த மருத்துவர் மதன் சொன்ன அத்தனை மருந்துகளையும் குறித்து வைத்துக் கொண்டு
தம்பி நீங்க போகலாம் .இந்த மருந்துகளை ஒரு முறை நான் செக் பண்ணிட்டு நோயாளிகளுக்கு எழுதித் தர்றேன்
என்று சொன்னார் ஒரு மருத்துவர்
ரொம்ப நன்றி சார்
என்று அந்த மருத்துவரிடமிருந்து விடை பெற்றான் மதன் ஒரு நாளைக்கு 12 மருத்துவர்கள் சந்திக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட பட்டியலை விட அதிகமாகவே சந்திப்பான் மதன்.
ஏனென்றால் சந்தைக்கு வந்த புதிதான மருந்து மாத்திரைகளின் பயன்பாடு .நோயாளிகளைச் சீக்கிரம் குணமாக்க வேண்டும் என்ற நோக்கம் தான் மதன் மாதிரியான விற்பனை பிரதிநிதிகளுக்கு உண்டு.
மருத்துவர்களைச் சந்திக்க வைக்கும் இப்படி ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்விழிக்கும் மதன் போன்ற மருத்துவ பிரதிநிதிகளின் வாழ்க்கை மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, நோயாளிகளை நோயில்லாத உலகமாக மாற்றுவது தான் குறிக்கோள்.
அந்த லட்சியத்தின் படி தான் பணம் குவிக்கும் படிப்பை விட்டு விட்டு சேவைச் செய்யும் இந்த பிரதிநிதி வாழ்க்கையில் இணைந்து இருக்கிறான் மதன்.
இப்போது ஒரு மருத்துவரை சந்தித்து விட்டான்.
சந்தைக்குப் புதிதாக வந்த மருந்து மாத்திரைகளின் பயன்பாடுகளையும் மருத்துவரிடம் எடுத்துச் சொல்லி விட்டான்.
அந்த மருந்து மாத்திரைகள் பணம் பொருள் இவைகளைத் தாண்டி நோயற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதுதான் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் குறிக்கோள். எண்ணம் .லட்சியம் மதன் மாதிரியான விற்பனைப் பிரதிநிதிகளின் எண்ணமும் கூட.
அந்தச் சந்தாேஷத்தில் அடுத்த மருத்துவரைச் சந்திக்க தன் இருசக்கர வாகனத்தை இப்பாேது முடுக்கினான் மதன்.