சென்னை, ஜூலை 4–
வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் சாலைப்பணிகளை துரிதமாக முடிக்க வலியுறுத்தியும், அதன் அவசியம் குறித்தும் உரை நிகழ்த்தினார். இதன் பின்னர் மாலை திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
வீடு திரும்பினார் முதலமைச்சர்
அதன்படி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வேகமாக பரவிய நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் மருத்துவமனையில் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக’ தெரிவித்தார். இந்நிலையில் தற்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார்.