செய்திகள்

மருதமலையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி

கோவை, ஜன. 12–

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவில் முருக பெருமானின் 7-வது வீடு என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அண்மைக்காலமாக மருதமலை முருகன் கோவில் பகுதி மற்றும், அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமா ட்டம் காணப்படுகிறது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர். நேற்று இரவு 7 மணிக்கு பக்தர் ஒருவர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் தனது காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடிவார பகுதியில் அருகே வந்த போது 3-வது வளைவில் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நின்றிருந்தது. இது காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை சற்று தூரத்தில் நிறுத்தினார். மேலும் தனது செல்போனை எடுத்து, அதில் சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்தார். இருளாக இருந்த இடத்தில் வெளிச்சம் ஏற்பட்டதை பார்த்ததும் சிறுத்தை வேகவேமாக ஓடி வனத்திற்குள் சென்று மறைந்து கொண்டது. இதையடுத்து பக்தர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு கீழே வந்தார்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.மேலும் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு கோவில் பகுதியில் தேர் நிறுத்தி வைத்திருக்கும் இடம் மற்றும் மலைப்படிக்கட்டில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

தற்போது மீண்டும் மருதமலை முருகன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள். இந்த நேரத்தில் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. வனத்துறையினர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *