சிறுகதை

மரத்தடி சிம்மாசனம் – பீம. சத்திய நாராயணன்

நம் அனைவருக்கும் ‘மரத்தடி விநாயகரைத் தெரியும், ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள அந்த வங்கியின் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு மரத்தடி என்ற அடை மொழியுடன் பிரபலமான ‘மரத்தடி அண்ணாச்சி’யையும் தெரியும்.

ஊழியர்கள் அனைவருக்கும் அவர் கடவுள் மாதிரி. எந்தப் பிரச்சினை என்றாலும் நேராக அவரிடம் ஓடுவார்கள். அவரும் சாமர்த்தியமாக அதைத் தீர்த்து வைத்து ஊழியர்களின் மனதில் பால் வார்த்து விடுவார். எனவே வங்கி முழுவதும் அவருக்கு பக்தர்கள் உண்டு. ஆம், பக்தர்கள்தான்!

டெல்லி முதல் கன்யாகுமரி வரை யார் சென்னைக்கு வந்தாலும் மரத்தடி அண்ணாச்சியைப் பார்க்காமல் போக மாட்டார்கள். இது போன்று சேத்ராடனம் வருபவர்களில் சில உயர் அதிகாரிகளும் அடக்கம்.

“மற்றவர்களைப் போல அவரும் ஒரு ஊழியர்தானே, அவருக்கு மட்டும் அப்படியென்ன மரியாதை?” என்று சிலர் கேட்கலாம்.

அவர் வங்கிப் பணிக்கு வந்து நாற்பது வருடங்கள் ஆகி விட்டன. ஒரே ஒரு பதவி உயர்வுதான் பெற்றார், அதாவது பியூன் வேலையில் இருந்து ரிகார்ட் கீப்பர் வேலைக்குத்தான். முப்பதாவது வயதில் பெற்ற அந்தப் பதவி உயர்வுதான் அவர் வாழ்வையே மாற்றி அமைத்தது.

பதவியேற்ற புதிதில் விவரம் புரியாமல் அவர் ஒரு முக்கியமான ஃபைலைத் தொலைத்து விட அது எதிர்க் கம்பெனிக்காரர்கள் கையில் கிடைத்து அதன் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஐந்து வருடங்கள் போராட்டம். கடைசியில் கோர்ட் மூலமாக அவர் மேல் தவறில்லை என்று முடிவாகி முழு சம்பளத்துடன் வேலையில் சேர்ந்தார்.

அந்த ஐந்து வருடங்களும் அந்த மரத்தடிதான் அவர் அமரும் சிம்மாசனம். ஆபீசுக்கு வருவது போல் சாப்பாட்டு டப்பாவுடன் மரத்தடிக்கு வந்து விடுவார். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அனைவருக்கும் ஆலோசனைகள் சொல்லுவார். ஐந்து வருட சோதனை முடிந்து வேலைக்கு சேர்ந்த பின்னும் மரத்துடன் அந்த நட்பு தொடர்ந்தது. தன்னுடைய இலாகாவுக்குச் சென்று வருகை ஏட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு மரத்தடிக்கு வந்து விடுவார்.

அத்தனை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லுவார். சில நேரங்களில் உயர் அதிகாரிகளும் அவரிடம் ஆலோசனை கேட்க வருவார்கள் என்பதுதான் சிறப்பு.

சுற்றிலும் ஊழியர்கள் இல்லாதபோது அவருடைய நண்பர்கள் அந்த மரங்கள்தான். வேம்பு, பூவரசம் என நான்கைந்து மரங்கள் அங்கே இருந்தன. அந்த மரங்களைச் சுற்றி வருவார், தடவிக் கொடுப்பார், பேசுவார். அந்த மரங்களுக்கும் அவருக்கும் மத்தியில் ஒரு அந்நியோன்னியமான உறவு இருந்தது நிஜம்.

ஆயிற்று, அவருக்கும் 58 வயது முடியப் போகிறது. அடுத்த மாதம் ரிட்டையர் ஆகிறார். அப்போதுதான் அந்தத் தகவல் வந்தது.

‘நாயகன்’ படத்தில் வருவது போல ஒரு ஜீப் வந்து நின்றது. கம்பெனி நிர்வாகிகளுடன் நான்கைந்து அதிகாரிகளும் விறுவிறுவென்று குறுக்கும் நெடுக்கும் அளவு எடுக்க ஆரம்பித்தனர்.

“அண்ணாச்சி, புதுசா பத்து மாடிக் கட்டிடம் வருதாமே?”

“அப்ப மரங்கள்?”, அண்ணாச்சி அப்பாவியாகக் கேட்டார்.

‘என்ன அண்ணாச்சி, வெள்ளந்தியாக் கேக்கறீங்க. வெட்டி விட வேண்டியதுதான்”

சக ஊழியர்களிடம் இருந்து பதில் வந்தது.

எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் அண்ணாச்சி, இந்தப் பிரச்சினைக்காகவும் உடனே ஜெனரல் மானேஜரிடம் ஓடினார்.

‘வாங்க அண்ணாச்சி’ வாய் நிறைய வரவேற்றார் ஜி.எம். அவரும் மரத்தடி அண்ணாச்சியால் ஒரு காலத்தில் பயன் பெற்றவர் தானே. டைபிஸ்ட் நளினிக்கு லவ் லெட்டர் எழுதித் தர அதை அவள் அப்படியே அன்றைய ஜி.எம்மிடம் கொடுத்து விட கம்பெனி விசாரணையில் அண்ணாச்சி எப்படியோ பூசி மெழுகி பிரச்சினையை சரி செய்து விட்டார். இருவரையும் வெறு வேறு இலாகாக்களில் போடட்டதோடு பிரச்சினை முடிந்தது.

“என்னப்பா கோபாலு, மரத்தை எல்லாம் வெட்டறீங்களாமே?” ஜி.எம்மிடம் கேட்டார்.

“அடடா, அதுக்குள்ள வந்துட்டாங்களா? அடுத்த மாசம்தானே வர சொன்னேன்”, ஜி.எம் கூறிய பதில் இது.

‘பிரச்சினை அது இல்லப்பா, மரத்தை எல்லாம் வெட்டிட்டா காத்துக்கும் நிழலுக்கு எங்க போறது?”

“அண்ணாச்சி உக்காருங்க. காபி சாப்பிடுங்க”,மணி அடித்தார் ஜி.எம்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா. மரத்தை வெட்ட அவசியம் என்ன இப்ப?”

இது போர்டு டெசிஷன் அண்ணாச்சி, அன்னெக்ஸ் பில்டிங் வருது”

“வேணாம்பா, மரத்தை வெட்டாதிங்க, போர்டுல சொல்லி, வேற அரேஞ்ச்மென்ட் பண்ணச் சொல்லுப்பா”

பெரிதாகச் சிரித்தார் ஜி.எம்.

“அண்ணாச்சி, இத்தனை நாள் லேபர் லீடரா இருந்தீங்க, இப்ப மரங்களுக்கு லீடர் ஆகறீங்களா, ஹா, ஹா” மீண்டும் சிரித்தார்.

“சிரிக்காதப்பா கோபாலு. லேபர்க்காகத்தான் சொல்றேன், மரத்தை வெட்டினா எல்லொருக்கும் கஷ்டம்’பா”

‘கவலைப்படாதீங்க அண்ணாச்சி, பில்டிங் பூரா ஏ.ஸி பண்ணிடறோம், ஆர்.ஓ வாட்டர் 24 மணி நேரமும் சப்ளை பண்றோம், கவலையே படாதிங்க அண்ணாச்சி, உங்களுடய ஐடியாஎது இருந்தாலும் சொல்லுங்க, மரத்தை வெட்றதைப் பத்திக் கவலைப் படாதீங்க” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“வேணும்’னா ஒண்ணு பண்றேன். நீங்க ரிட்டயர் ஆகிற வரைக்கும் மரங்களை யாரும் தொடாமப் பாத்துக்கறேன், இன்னும் ரெண்டு மாசம் கழிச்சுத்தான் வேலை ஆரம்பிக்கும். இந்தாங்க காபி சாப்பிட்டுப்போங்க”

அண்ணாச்சி எமாற்றத்துடன் எழுந்தார்.

“ஆங் அண்ணாச்சி, உங்க பி.எஃப், கிராஜூடி பேப்பர் எல்லாம் இன்னைக்குத்தான் மேல போயிருக்கு. பத்து லட்ச ரூபாய்க்கு மேல வருது, பென்ஷனும் மாசம் இருபதாயிரம் ரூபாய்க்குமேல வருது. சந்தோஷமா வாங்கிக்கோங்க. காசி, ராமேஸ்வரம் எல்லாம் அண்ணியோட சந்தொஷமாப் போயிட்டு வாங்க. எப்ப வேணும்’னாலும் என்னப் பாக்க வாங்க. உங்கஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேணும்” என்றார் ஜி.எம்.

இதற்கு மேல் பேசுவதற்கு ஏதும் இல்லை என்று சொல்லாமல் சொல்வதைப் புரிந்து கொண்ட அண்ணாச்சி தளர்ந்த நடையுடன் புறப்பட்டார்…….

ரிடையர் ஆகும் நாளை எதிர்பார்த்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *