மணிக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்கள் இருந்தன. அத்தனை மரங்களையும் எண்ணி வருவதற்குள் தலையைச் சுற்றி மறுபடியும் எண்ண வேண்டும் போல தோன்றும் ‘
வார்த்தைகளால் எண்ணிக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பை வாங்கி இருந்தார். அவர் வைத்திருக்கும் தென்னந்தோப்பை நடந்து போய் எல்லாம் கடக்க முடியாது .இரு சக்கர வாகனங்கள் அல்லது காரில் சென்று தான் சுற்றி பார்க்க வேண்டும் என்று விசாலமாக இருந்தது.
ஒருமுறை தேங்காய் வெட்டினால் மலை போல் குவிந்து கிடக்கும் தேங்காய்கள் .
இவைகள் எல்லாம் எப்படி சாத்தியம் ?குறுகிய காலத்தில் இவ்வளவு தென்னை மரங்களை மணியால் எப்படி தேடி வாங்க முடிந்தது ?அதுவும் எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளையும் வாங்குகிறார். எதற்கு? என்று மணியைப் பற்றித் தெரியாதவர்கள் குடைந்து குடைந்து கேள்வி கேட்டார்கள்.
தெரிந்தவர்கள் பதில் சொன்னார்கள். தெரியாதவர்களுக்கு மணியே பதில் சொன்னார்.
என்ன நண்பர்களே….. என்ன இந்த மணி தென்னை மரங்கள் எல்லாம் தேடித் தேடி வாங்குறான்னு நினைச்சீங்களா? அந்த ஒவ்வொரு மரத்திலயும் எங்களோட வறுமை ஒட்டி இருக்கு. ஒவ்வொரு ஒசந்த மரத்துக்கு கிளை எங்களோட பசி புதைக்கப்பட்டிருக்கு.
இப்போ நான் எத்தனையோ லட்சம் தென்னை மரங்களுக்கு அதிபதி கோடிக்கணக்கான பணம் இருக்கு. ஆனா ஒரு காலத்தில ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு தான் நான் முன்னுக்கு வந்தேன். அதுக்கு எல்லாம் மூல காரணம். எங்க அப்பாவுடைய உழைப்பு .எங்க அப்பா பட்ட வேதனை. எங்க அப்பா பட்ட கஷ்டம்.இந்த மாதிரி இருக்கிற மரங்கள்ல ஏறித்தான் எங்க அப்பா எங்களக் காப்பாற்றினார்.
அப்போ நான் சின்ன வயசா இருப்பேன். வீட்ல கஷ்டம் அப்பாவுக்கு வேற வேலை தெரியாது. தென்னை மரம் ஏறுவது மட்டும் தான் அப்பாவோட வேலை. கரணம் தப்பினால் மரணம்னு சொல்ற அளவுக்கு அவ்வளவு உயரமான மரங்கள்ல உயிரைப் பணையம் வச்சு ஏறுவாரு அப்பா. அது சாதாரண விஷயம் தான்.
ஒரு தடவை சின்ன வயசா இருக்கும் போது ஒரு முறை நான் போய் பார்த்திருக்கேன். நிமிந்து பார்த்தா கழுத்து ஒடிஞ்சு போற அளவுக்கு அவ்வளவு உயரத்தில அப்பா ஏறுவாரு. இப்படி காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் தென்னை மரம் ஏறித்தான் எங்க அப்பா எங்களை படிக்க வச்சார், நான் நல்ல படிச்சேன் .உயர்ந்த இடத்துக்கு வேலைக்கு போனேன். எந்த தென்னை மரத்தை ஏறி எங்க அப்பா எங்களை படிக்க வச்சாராே அதே தென்னை மரங்களை வாங்கி எங்க அப்பாவை சந்தோஷப்படுத்துவது இப்ப உண்மையிலேயே நான் பண்ண சாதனைன்னு நினைக்கிறேன்.
எங்க அப்பா இன்னைக்கு உயிரோட இல்லனாலும் அவர் நினைவா அவ்வளவு தென்னை மரங்களையும் நான் வாங்கியிருக்கேன்.
அதோ அங்க இருக்கு பாருங்க. அந்தத் தென்னை மரத்தில ஏறித்தான் கடைசியா எங்க அப்பா மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாரு. அந்த மரம் மட்டும் எனக்கு கோயில் மாதிரி தெரியுது. அதுல தான் எங்க அப்பா இருக்கிறதா நினைக்கிறேன். எங்க போனாலும் இந்த மரத்த கும்பிட்டுட்டு தான் அடுத்த வேலைக்கு போறேன் .
தென்னை மரமா தலையாட்டி கேட்டிருக்கிறாரு அப்பா. எங்க கூட தான் இருக்கிறதா தான் நினைக்கிறேன். இன்னும் இன்னும் எவ்வளவு தென்னந் தோப்புகள வாங்க முடியுமோ அவ்வளவும் வாங்கணும். எல்லாம் எங்க அப்பாவோட நினைவா தான் என்று மணி சொன்ன போது,
அவர் உயிர் நீத்த தென்னை மரம் தன் தலையைக் கீழே இறக்கி மறுபடியும் மேலே ஏற்றி, தன் தென்ன ஓலைகளை மயில் தோகை போல விரித்தாடியது.