செய்திகள்

மரக்கிளை வயிற்றில் குத்தி உயிருக்கு போராடிய வாலிபருக்கு அறுவை சிகிச்சை

விழுப்புரம், டிச. 5–

மரக்கிளை வயிற்றில் குத்தி உயிருக்கு போராடிய வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் சாதனை புரிந்தனர்.

இது பற்றி விழுப்புரம் மருத்துவ கல்லுாரி டீன் சங்கரநாராயணன் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் வட்டம், பெரியசெவலை அருகே துலுக்கா பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் முருகதாஸ் (23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த முருகதாஸ் கடந்த 14 ம் தேதி தனது வீட்டில் டிவி பார்த்த போது சரியாக தெரியவில்லை என தென்னை மரத்தில் ஏறி கிளையை வெட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தபோது அருகிலிருந்த கருவேல மரக்கிளை அவரது இடது அடிவயிற்று பகுதியில் 2 அடி ஆழத்திற்கு குத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்து கல்லூரி மருத்துவக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை பரிசோத்த டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து எனது தலைமையில் துறை தலைவர் தன்மாறன், பேராசிரியை பரிமளா, உதவி பேராசிரியர்கள் ராஜபாண்டி, ஏகநாதன், மயக்கவியல் துறை தலைவர் பத்மநாபன், டாக்டர் சிவ்ராஜ், செவிலியர் பிரதீப் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர்கள் 3 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து அவரது உடம்பில் குத்தியிருந்த குச்சியை அகற்றி, சிறுகுடல், மலக்குடல் தாங்கி, இரப்பையில் ஏற்பட்ட துளைகளை சரி செய்து முருகதாசின் உயிரை காப்பாற்றினர். அறுவை சிகிச்சை செய்து 6 நாட்களுக்கு பிறகு திரவ உணவு கொடுத்தனர். 10 நாளில் வயிற்றில் போட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு முருகதாஸ் நல்ல நிலையில் வீடு திரும்பினார்.

அரசு மருத்துவ மனையில் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என கூறினார். மேலும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவை டீன் சங்கர நாராயணன் பாராட்டினார். பேட்டியின் போது நிலை மருத்து அலுவலர் கதிர், துணை முதல்வர் சந்திரா, நிர்வாக அதிகாரி கவிஞர் சிங்காரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *