மரக்காணம், ஜூலை 12–
மரக்காணம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அக்காள் – தங்கை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம் அருகே கூனி மேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதில் ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கௌசல்யாவிற்கும் கடந்த வாரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு அவரது குழந்தைகளான ஜோவிதா வயது 4 மற்றும் 18 மாத குழந்தையான சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்த 10 ஆம் தேதி வந்துள்ளார்.
இவர் நேற்று மதியம் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால் நேற்று இரவு முழுக்க இவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை குழந்தை சஸ்மிதாவின் உடல் இறந்த நிலையில் கூனி மேடு பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதுபோல் சிறுமி ஜோபிதாவின் உடல் அனுமந்தை குப்பம் கடற்கரையடிவட கரை ஒதுங்கியது.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய இரண்டு சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தனது குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்ற ஆனந்த வேலு இதுவரை எங்கு உள்ளார் என்ற விபரம் தெரியவில்லை. இதனால் ஆனந்த வேலு குடும்ப பிரச்சினை காரணமாக தனது குழந்தைகளுடன் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா. அல்லது தனது குழந்தைகளை மட்டும் கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தப்பி ஓடி விட்டாரா என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை மரக்காணம் போலீசார் துவக்கி உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தி உள்ளது.