விழுப்புரம், ஜன.21-–
மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரத்தில் வனத்துறை சார்பில் மாநில அளவிலான வன அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார்.
அப்போது அவர், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற திட்டங்கள் குறித்தும், ஆரம்பிக்கப்பட வேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தார்.
இதில் அனைத்து மாவட்ட வன அலுவலர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதை கேட்டறிந்த அமைச்சர் பொன்முடி, இப்பணிகள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
-தமிழ்நாட்டில் வனத்துறை வளர்ச்சியையும், அதேநேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை முக்கியமாக கருத்திற்கொண்டும் இந்த ஆய்வரங்கம் நிறைவேறியுள்ளது. மேலும் காட்டுப்பன்றிகளும் வனவிலங்குகளில் சேர்க்கப்பட்டுள்ள ஒன்றாகும். நமது மாநிலத்தில் சில பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
அரசின் சார்பில் சென்ற ஆண்டு நியமிக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையின்படி, முதல் 3 கிலோ மீட்டருக்குள் காட்டுப்பன்றிகள் வந்தால் விரட்டி அடிக்கப்படும். 3 கிலோ மீட்டருக்கு மேல் வந்தால் அவைகள் சுடப்படும். இதுவரை சுடுவதற்கான அதிகாரத்தினை கூட நாம் வழங்கியதில்லை.
இக்குழுவானது 5 கிலோ மீட்டருக்குள் வரும் காட்டுப்பன்றிகளை சுடலாம் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி 3 கிலோ மீட்டருக்கு மேல் வெளியே வரும் காட்டுப்பன்றிகளை சுடலாம் என தெரிவித்துள்ளார்.
எந்தெந்த கிராமப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வருகின்றனவோ, அந்த கிராமத்தின் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அப்பகுதியின் வனத்துறை அலுவலர், மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது இதுபோன்று இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் இருக்கிறது என்று தகவல் அளிக்குமானால் வனத்துறையானது, அந்த காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
இதுமட்டுமல்லாமல் வனத்துறை இல்லாத பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் என்ற கணக்கீடு ஏதும் இல்லாமல் சுடுவதற்கான உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயம்புத்தூரில் வருகிற 28-–ந் தேதி வனத்துறை அலுவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி புதிய வகை துப்பாக்கிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கருத்திற்கொண்டுதான் அரசாணை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் காட்டு யானைகளால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்ட கும்கி யானைகள் மூலம் காட்டு யானைகளை விரட்டும் பணிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செஞ்சிபாக்கம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வெகு விரைவில் பணிகள் தொடங்கப்படும். வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களையும் வெகு விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் வனத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் பழனி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ராகேஷ் குமார் டோக்ரா, தீபக் ஸ்ரீவத்சவா, தெபாஷீஷ் ஜானா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள் நாகநாதன், தின்கர் குமார், ஆஷீஷ்குமார் ஸ்ரீவத்சவா, ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி ஆகியோர் கலந்துகொண்டனர்.