செய்திகள்

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி: தேவநாதனின் 5 கணக்குகள் முடக்கம்

Makkal Kural Official

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை, ஆக. 20–

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.525 கோடியை மோசடி செய்த விவகாரத்தில், தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான தேவநாதன் யாதவ் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சிவகங்கை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். அப்போதே, இந்த மோசடிகள் குறித்து புகார்கள் வெளியான போதிலும், அவரை வேட்பாளராக அறிவித்த பாஜக வாபஸ் பெறவில்லை.

இந்த நிதி நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதலீட்டு பணத்தின் முதிர்வு பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட 144 பேர் தங்களது ரூ.24.5 கோடி பணத்தை பெற்று தர கோரி அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

5 கணக்குகள் முடக்கம்

மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவநாதன் யாதவ் நடத்தும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் மற்றும் சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது கடந்த 12 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். திருச்சி அருகே இருந்த தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும், 150 ஆண்டு கால பழமையான மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதில் ஒரு பகுதியை தேவநாதன் யாதவ் நடத்தும் தனியார் தொலைக்காட்சி அலுவலகமாக மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், நிதி நிறுவனத்தின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தங்கக் கட்டிகளை தேவநாதன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து, தேவநாதன் மோசடி தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியான நிலையில், தேவநாதன் யாதவ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தேவநாதனின் 5 வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தேவநாதனின் சொத்து பட்டியலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *