38வது மாவட்டமாக
மயிலாடுதுறை நாளை உதயம்:
எடப்பாடி பழனிசாமி துவக்குகிறார்
சென்னை, டிச. 27–
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து 38வது மாவட்டமாக மயிலாடுதுறை நாளை உதயமாகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன. கடந்த ஆண்டு காஞ்சிபுரம், திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் மாவட்டங்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து மார்ச் 24ம் தேதி சட்டசபையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குவதற்காக சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஆர்.லலிதா மற்றும் எஸ்.பி.யாக என்.ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய வட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகராட்சிகள், குத்தாலம், தரங்கம் பாடி, மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய பேரூராட்சிகள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் இடம் பெற உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லை வரையறையும் நிறைவடைந்து விட்டது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தமிழகத்தின் 38-வது மாவட்டமாக புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயலாளர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.