செய்திகள்

மயிலாடுதுறை, அரியலூரைத் தொடர்ந்து தஞ்சாவூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?

Makkal Kural Official

தஞ்சாவூர், ஏப். 15–

மயிலாடுதுறை, அரியலூரைத் தொடர்ந்து தஞ்சாவூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நேரில் சென்று அந்த பகுதியில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனை மலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் மோப்ப நாய்களும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டது.மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாள பாலத்தில் வனத்துறையினர் சிறுத்தையின் கழிவுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த சிறுத்தை மயிலாடுதுறை கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். பின்னர் குத்தாலம் காஞ்சி வாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எங்கும் தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறையில் காணப்பட்டதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாம்மிட்டு சிறுத்தையை தேடி வந்தனர். தற்போது சிறுத்தை அரியலூர்-பெரம்பலூர் எல்லை பகுதியில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் பகுதி உமையாள்புரம் ஊராட்சி, உடப்பாங்கரை கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் கடந்த 13-ந் தேதி மாலை 7 மணியளவில் தனது பருத்தி வயலில் தண்ணீர் பாய்ச்சும் போது சத்தம் கேட்டு பார்த்த போது சிறுத்தை சென்றதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவரது வயலில் அண்டகுடி கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தை சென்றதாக கால் தடம் எதுவும் இல்லை எனவும், புல்வெளிகள் மிகுந்த பகுதியாக இருப்பதாகவும், தெரிவித்தனர். மேலும் இந்த இடங்களை பார்வையிட்ட வனத்துறையினர் உமையாள்புரம், உடப்பாங்கரை, திருமண்டங்குடி, கூனஞ்சேரி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்தனர்.

ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சிறுத்தை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *