இன்றும் 9 பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை, ஏப். 5–
மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க 3வது நாளாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் களமிறங்கினர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவ- மாணவியர் நலன்கருதி மயிலாடுதுறையில் கடந்த 2 இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செம்மங்குளம், ஆரோக்கியபுரம் பகுதிகளில் செயல்படும் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும்பணி இன்று 3வது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியநாதபுரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.சித்தர்காடு அருகே உள்ள தண்டபாணி செட்டித்தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த ஆடு சிறுத்தையால் வேட்டையாடப்பட்டதா என்று மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.