செய்திகள்

மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதினத்துடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்திப்பு

மயிலாடுதுறை, ஜூன் 4–

மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆய்வுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை மயிலாடுதுறைக்கு வருகை தந்த அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி திருக்கடையூர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தருமபுரம் ஆதீனத்திற்க்கு வருகை தந்து தொன்மை வாய்ந்த தொல்காப்பிய கல்வெட்டுகள் மற்றும் பதிவேடுகள் மற்றும் திருத்தேர்கள் மற்றும் இங்கு உள்ள பாடசாலைகள் மற்றும் பசுமடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டோம். இங்கு பாடசாலை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியும் மற்றும் உயர்தர உண்டு, உறைவிடம் ஆகியவை அளிக்கப்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. இக்கல்லூரியின் 25 ஆம் ஆண்டு, ஆண்டு விழாவிற்கு கருணாநிதியும், ஐம்பதாம் ஆண்டு விழாவிற்கு பேராசிரியர் அன்பழகனும் பங்கேற்றதாக இங்கு ஆதினம் குறிப்பிட்டார். அதேபோல் இந்த ஆண்டு நடைபெற உள்ள 75ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஆதீனம் தெரிவித்துள்ளார். அதனை முறைப்படி முதலமைச்சரிடம் தெரிவிப்பேன். இந்த அரசு ஆதீனங்களோடு சுமூகமான நிலையை கடைபிடித்து வருகிறது என்பது இது போன்ற நிகழ்வுகளின் வாயிலாக அனைவரும் அறிந்துள்ளார்கள்.

தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட 27 திருக்கோயில்களில் தற்போது பதினெட்டு திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு படிப்படியாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்ற திருக்கோயில்களை கண்டறிந்து அங்கு திருப்பணிகள் விரைந்து நடைபெறவும், கும்பாபிஷேகம் தொடங்கப்படாத திருக்கோயில்களில் உடனடியாக திருப்பணிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளாகவே நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருக்குடமுழுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு மட்டும் 1000 திருக்கோயில்களுக்கு ரூபாய் 1500 கோடி செலவில் திருக்குடமுழுக்கு நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அவரது உத்தரவின்படி திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் முதலமைச்சர் இதற்கு முன்பு எந்த காலத்திலும் இல்லாத வகையில் இந்த ஆட்சி காலத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோயில்களை பழமை மாறாமல் புனரமைக்கவும் ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க அரசு பணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 80 திருக்கோயில்கள் கண்டறியப்பட்டு திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசின் , சிறப்பான இறைப்பணி செயல்பாடுகளால் பக்தர்கள் மனம் குளிர்ந்துள்ளனர். இதனால் தமிழக அரசை பெரிதும் பாராட்டியும் வருகின்றனர். இந்த அரசு திருப்பணிகளில் தலைசிறந்த அரசாக திகழ்ந்து வருகிறது. திருக்கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்பு என்பதை நாங்கள் இரண்டு வகையாக பார்த்து வருகிறோம். அவற்றில் ஒன்று பல்லாண்டு காலமாக வசித்து வரும் வாடகைதாரர்கள் ஒரு கண்ணோட்டமாகவும், வணிகரீதியில் ஆக்கிரமித்து அவற்றின் வாடகைகளை திருக்கோயிலுக்கு செலுத்தாமல் உள்ளவர்களை வேறு ஒரு கண்ணோட்டமாகும் பார்க்கிறோம். இவ்வகையில் திருக்கோயிலுக்கு இழப்பினை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிச்சயம் எடுக்கும். நூறாண்டுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயில்களை புனரமைக்க ஏற்கனவே ஐந்து குழுக்கள் கொண்ட கமிட்டி இருந்தது, இதனால் கால விரயம் நிறைய ஆவதால் அவற்றினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு குழுக்கள் கொண்ட கமிட்டியாக மாற்றி அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இந்த கமிட்டி கூடி ஆய்வு செய்து திருப்பணிகளுக்கான கோயில்களை கண்டறிந்து வருகிறது, ஒவ்வொரு மாதமும் 300 திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மலைக்கோயில்களில், குறிப்பாக வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, நரசிம்மர் மலை, பர்வதமலை, கண்ணகி கோவில் ஆகிய மலைகளில் பக்தர்களின் வசதிக்காக பழமை மாறாமல் பக்தர்கள் எளிதாக மலை ஏறுவதற்கு ஏற்ற வண்ணம் ,இயற்கை எழிலை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தும் ஆய்வு பணி ரூபாய் ஒரு கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பிரச்சினைகள் இல்லை என்றால் இந்து சமய அறநிலைத்துறை எந்த கோயில்களில் தலையிடாது. ஆனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும் அது குறித்த புகார்கள் எந்த கோயிலில் இருந்து வந்தாலும் நிச்சயம் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஆணையர் (பொறுப்பு) இரா.கண்ணன், தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், பன்னீர்செல்வம், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீன மடத்திற்குச் சென்ற அமைச்சர் சேகர்பாபுவிற்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து அவரிடம் அமைச்சர் சேகர்பாபு ஆசி பெற்றார். இந்த சந்திப்பின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையடுத்து அங்கு 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.