செய்திகள்

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

பொதுமக்கள் விடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

மயிலாடுதுறை, ஏப். 3–

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் சிறுத்தையின் கால் தடம் உள்ளதை பொதுமக்கள் காண்பித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் மற்றும் வனத்துறை ஆய்வு செய்த போது நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதனால் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் வனத்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை கண்டால் 9626709017 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தொடர்ந்து மழலையர், தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேலான பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்க மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறையில் பதுங்கியுள்ள சிறுத்தையை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *