மயிலம், மார்ச் 23–
மயிலம் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
மயிலம் வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர்த் திருவிழா கடந்த 15.3.2024அன்று காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து 19–ந் தேதி இரவு தங்க மயில் வாகன உற்சவமும், நேற்று திருக்கல்யாணம் வெள்ளிக் குதிரை வாகன உற்சவமும் நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று காலை 6 மணியளவில் நடைபெற்றது.
தேரை சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் ஸ்ரீமத் சிவ ஞான பாலய 20 -ம் பட்டம் சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இதில் தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்ட காவல கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், திமுக மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் தமிழ் கல்லூரி செயலர் ராஜிவ் குமார் ராஜேந்திரன், கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.