செய்திகள்

மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தவில்லை: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

கொல்கத்தா, செப். 8–

மேற்குவங்க இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி, பாஜகவுக்கு சாதகமாக நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தாலும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் போட்டியில்லை

தற்போது முதலமைச்சராக உள்ள மம்தா பதவியில் தொடர வேண்டும் என்றால், அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 30ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தின் பவானிப்பூர் தொகுதியில், முதலமைச்சர் மம்தா போட்டியிட உள்ளார். இன்று முதல் பவானிப்பூர் தொகுதியில் மம்தா தீவிர தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்த நிலையில் பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, பவானிப்பூரில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி, பாஜகவுக்கு சாதகமாக நிலையை ஏற்படுத்த கட்சி தலைமை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *