நாடும் நடப்பும்

மம்தா நடத்தும் அரசியல் சதுரங்கம் ராணியை வீழ்த்தினாலும் ஆட்டம் முடியாது!

நாட்டின் ‘தலை முதல் வால்’ வரையான பகுதிகளான அசாம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கிவிட்டது.

இந்த ஐந்து சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் ஒன்றான வங்கத்தில் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்துவதே பாரதீய ஜனதாவின் முக்கிய குறியாக இருக்கிறது.

இம்முறை அங்கு தான் எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த முறையும் இம்மாநிலத்தில் ஏழு கட்டங்களாகவே தேர்தல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். மேலும் 2019 மக்களவைத் தேர்தலிலும் கூட ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

இப்படி ஏன் நீண்ட நெடிய தேர்தல் தேதி அறிவிப்பு? வங்க அரசியல் களம் வன்முறைகளுக்கு பஞ்சமில்லா ஒன்றாகும்.

முதன்முதலில் மம்தா 2011ல் வெற்றி பெற்ற போதும் இங்கு ஆறு கட்டங்களாகத் தான் நடைபெற்று இருக்கிறது.

ஒரு பக்கம் வங்காளதேச எல்லைப் பகுதிகளில் இருந்து ஊடுருவல், நக்சல்கள் பல முனைகளிலிருந்து ஊடுருவல், உள்ளூர் குண்டர்களின் அட்டூழியம் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது.

இம்முறை கடந்த வாரம் முதலமைச்சர் மம்தாவையும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மார்ச் 10–ந் தேதி மாலையில் தனது பாதுகாப்பு கவசமின்றி, பாதுகாப்பு அம்சங்கள்யில்லா சாதாரண காரில் மம்தா தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் ஒரு கோயிலுக்கு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களில் தள்ளி நிற்க, புகைப்பட மற்றும் டிவி குழுமம் ஏதுமில்லா நேரத்தில் மம்தா காரை விட்டு முன் சீட் கதவை திறந்து வெளியேறுகையில் 4 குண்டர்கள் முதல்வரை தாக்கியுள்ளனர்; தரதரவென கீழே இழுத்து தள்ளியுள்ளனர்.

சில நொடிகளில் முதலமைச்சரின் கூக்குரலைக் கேட்டு ஸ்தம்பித்து விட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு அந்த குண்டர்களைப் பிடிக்கும் முன்பே அந்த குண்டர்கள் மாயமாய் மறைந்து விட்டனர். இது வரை யார்? எவர்? என்பது கூட தெரியவில்லை.

உடனே வரவழைக்கப்பட்ட ஆம்புலன்சில் கொல்கத்தாவிற்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு தனியார் மருத்துவமனையில் உடனடி சிகிச்சை தரப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் அவருக்கு தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு தேர்தல் பிரச்சாரத்திற்கு போக வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக மருத்துவமனையை விட்டு வெளியேறி பிரச்சாரத்தை மீண்டும் துவக்கி விட்டார்.

தற்போது அவர் விசேஷ தள்ளு வண்டியில் அமர்ந்து தான் நகர்ந்து செல்ல முடிகிறது! அதே உடல் நிலையோடு வீல்சேரில் அமர்ந்தபடியே ஒரு பிரச்சார ஊர்வலத்திலும் பங்கேற்றுள்ளார்.

இது அரசியல் ஆதாயத்துக்கான நாடகம் என்று பாரதீய ஜனதா தலைவர்கள் கருத்து கூறிவிட்டனர்.

மம்தா கட்சியினரோ தேர்தல் ஆணையத்திடம் பிரச்சார நேரத்தில் அரசியல் எதிரிகள் கட்டவீழ்த்துள்ள அடிதடி அரசியல் என்று தேர்தல் ஆணையத்திடமே குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் மம்தா செய்த பல தவறுகளை, அதாவது பாதுகாப்பு விவகாரத்தை காற்றில் பறக்க விட்டதைக் கண்டித்துள்ளனர்.

எது எப்படியோ வங்க மாநிலத்தில் எல்லா ஊடகங்களிலும் தலைப்புச்செய்தி மம்தா தான்! உண்மையில் அவர் தாக்கப்பட்டாரா? அல்லது கண் துடைப்பு நாடகமா? என்ற விவாதமும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தனது பரிவாரங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய போது பாரதீய ஜனதாவின் செல்வாக்கு அம்மாநிலத்தில் கணிசமான இடங்களை பெற்று விடும் என்ற அளவிற்கு பிரகாசித்தது.

ஆனால் மம்தாவின் இந்த சம்பவமோ அவரை நாடு தழுவிய பிரச்சார பீரங்கி என்ற நட்சத்திர அந்தஸ்தை தந்து விட்டது!

பெண் வாக்காளர்களைத்தான் இந்தத் தேர்தலில் பெரிதும் நம்பியிருக்கிறார் மம்தா. அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பெண்கள் மிகப் பெரிய அளவில் கலந்துகொள்கிறார்கள். அவரது தேர்தல் பிரச்சாரங்களும் பெண்களைக் குறிவைத்தே அமைந்திருக்கின்றன. மம்தா ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களைப் பற்றிய விளம்பரங்கள் அனைத்திலும் மம்தாவுடன் பெண்களின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மம்தாவின் பேச்சிலும் அடிக்கடி ‘தாய்மார்களே’, ‘சகோதரிகளே’ என்ற வார்த்தைகள்தான் அடிக்கடி இடம்பெறுகின்றன.

பெண்களை மையப்படுத்தும் அரசியலைக் கடந்த மக்களவைத் தேர்தலின்போதே மம்தா பரிசோதித்துப் பார்த்துவிட்டார். 42 வேட்பாளர்களில் 17 பேர் பெண்கள். ஏறக்குறைய இது 41%. பாஜகவும் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தங்களது மகளிர் அமைப்புகளை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. மம்தா தேர்தல் பிரச்சாரத்துக்காக மட்டும் மகளிர் உரிமை பேசுபவரல்ல. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பல நலத்திட்டங்களை அவர் முன்னெடுத்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது 2013-ல் அவர் தொடங்கிய கன்யாஸ்ரீ திட்டம். 13 வயது முதல் 18 வயது வரையிலான திருமணமாகாத பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் இத்திட்டம், குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, மாணவிகளின் பள்ளி இடைநிற்றலையும் குறைத்திருக்கிறது.

ஆக இவரை ‘கொல்கத்தாவின் ஜெயலலிதா’ என்றே பார்க்கப்பட வேண்டும். இதுவரை மகளிரை கவர்ந்து விட்ட மம்தா இந்த குண்டர்கள் சம்பவத்தால் அனைத்து தரப்பு வாக்காளர்களின் மனதில் இரும்புகர தலைவராக உயர்ந்து விட்டார்.

பாரதீய ஜனதாவிற்கு இது மிகப்பெரிய சவாலாகும். காரணம் இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் ஒரு வேளை மம்தா கட்சியினர் தோல்வி கண்டு, பாரதீய ஜனதா ஆட்சியை அம்மாநிலத்தில் பிடித்து விட்டால் மம்தா அங்கு நல்ல எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட மாட்டார்!

மறு நாளே டெல்லியில் முகாமிட்டு தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் போட்டியில் களம் இறங்கி விடுவார்.

7 முறை எம்பியாக பணியாற்றியவர், சில காலம் ரெயில்வே துறை மந்திரியாகவும் பணியாற்றிய அனுபவங்கள். கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக ஆட்சியில் இருந்து பல்வேறு சிக்கல்களை சமாளித்த அனுபவசாலியுமாவார்.

ஆக டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி தன் பக்கம் இழுத்து காங்கிரசையும் விட பலமான ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கிவிடும் சாமர்த்தியம் மம்தாவிற்கு உண்டு!

ஆக பிரதமர் மோடியின் குழுமத்திற்கு அடுத்த சவாலாக தேசிய அரசியலில் புதிய உதயம் மம்தா பானர்ஜி என்பது தான் உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *