நியூயார்க், டிச. 27–
உயர்ந்த வாழ்க்கைத் தரம், நற்பெயர் காரணமாக மக்களின் நம்பிக்கையை வென்றவர் மன்மோகன் சிங் என்றும், அவர் பேச்சை அனைவரும் கவனிப்பார்கள் என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, நிதியமைச்சராக, 2004 முதல் 2014 வரையில் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்து இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு சென்று வரலாற்றில் நிலைத்து நிற்கும் மன்மோகன் சிங் (வயது 92) நேற்றிரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து, அவருடனான தங்களின் மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். மன்மோகன் சிங்குக்கு இந்தியா மட்டுமல்லாது உலக அரங்கிலும் நன்மதிப்பு இருந்திருக்கிறது.
ஒபாமா புகழாரம்
அதற்குச் சான்றாக, மன்மோகன் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் அதிபராகச் செயல்பட்டுவந்த பராக் ஒபாமா (2009 – 2017) பல்வேறு சமயங்களில் அவரைப் பாராட்டியிருக்கிறார். ஒபாமா தனது `A Promised Land’ புத்தகத்தில், “அடிக்கடி துன்புறுத்தலுக்குள்ளான சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் உட்சபட்ச பதவிக்கு உயர்ந்திருக்கிறார். உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டு வந்ததன் மூலமாகவும், ஊழல் செய்யாமல் சம்பாதித்த நற்பெயரினாலும் மக்களின் நம்பிக்கையை வென்றவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2009-ல் லண்டனில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், “இந்தியாவின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் மன்மோகன் சிங்கே காரணம். இந்த உச்சி மாநாடு முடியும் நேரத்தில், அவரை நான் நண்பர் என்று அழைக்க முடியும் என நம்புகிறேன் என்றார். அதைத்தொடர்ந்து, 2010-ல் டொராண்டோவில் (கனடா) நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய ஒபாமா, “பிரதமர் பேசும்போது மக்கள் அனைவரும் கவனிப்பார்கள் என்று என்னால் இங்கு கூற முடியும் என்று மன்மோகன் சிங்கைப் புகழ்ந்தார்.
மேலும், அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், “நீங்கள், ஏஞ்சலா மெர்கல் (ஜெர்மனி) அல்லது பிரதமர் மன்மோகன் சிங் அல்லது அதிபர் லீ (தென் கொரியா) அல்லது பிரதமர் எர்டோகன் (துருக்கி) அல்லது டேவிட் கேமரூன் (இங்கிலாந்து) ஆகியோரிடம் கேட்டால், அதிபர் ஒபாமா மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறுவார்கள். இந்த நட்பும், பிணைப்பும்தான் நாடுகளுக்கிடையிலான உறவைத் திறம்பட செயல்படுத்த முடிந்தது என்று ஒபாமா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.