செய்திகள்

மன்னிப்பு கோரினார் ராசா

ஊட்டி, மார்ச் 29–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த தரக்குறைவான பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில், அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் அண்ணா தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு உரிய நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த புகார் மனு அடிப்படையில் ஆ.ராசா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் நேற்றைய பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசுவோருக்கு, ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பார் என கண்ணீர் மல்க கூறினார்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊட்டியில் கூறியதாவது:–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். எனது பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் கண் கலங்கியதால், மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர் ஆதங்கப்பட்டு கண்ணீர் விட்டதால் முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்துப் பேசியதற்கு மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை.

எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு. முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *