சிறுகதை

மனைவி – ராஜா செல்ல முத்து

மோகனுக்கு வலக்கரம், இடக்கரம் எல்லாக் கரமுமாய் இருந்தாள் ராஜேஸ்வரி .மோகன் பெரிய பதவியில் இருந்தாலும் அவனுக்கு அத்தனை இடர்களையும் சீர் செய்து கொடுத்து மோகனை ஒரு மனிதனாக மாற்றியமைத்தது ராஜேஸ்வரி தான்.

அவன் ஆயிரம் பிரச்சனைகள் உடன் வந்தாலும் அவனை் தலைகோதி விட்டு அவனை மடியில் கிடத்தி ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அத்தனையும் லேசாக மாற்றிவிடுவாள் ராஜேஸ்வரி.

மோகன் சமூகத்தில் ஒரு பெரிய மனிதனாய் சொத்துபத்து வீடு வாசலுடன் குடியிருப்பதற்கு மனைவி ராஜேஸ்வரி தான் காரணம் என்று உற்றார் உறவுகள் முதல் உடன் பணிபுரியும் அலுவலர்கள் வரை அனைவரும் சொல்வார்கள்.

ராஜேஸ்வரி மாதிரி பொண்டாட்டி நமக்கு இருந்தா நான் அந்த ஊர் கட்டி அடிப்பேன் என்று மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு ராஜேஸ்வரி மோகனுக்கு பக்கத்துணையாக இருந்தாள்.

“ஒரு பெரிய பிராஜக்ட் அதுவும் கோடிக்கணக்கான செலவு அதை செய்யலாமா? வேண்டாமா? என்று இருதலை கொல்லியாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தாலும் ராஜேஸ்வரி தான் பிடிவாதமாக சொன்னாள்.

நீங்க இந்த பிராஜக்ட செய்யுங்க ; அதை வாங்குங்க: கண்டிப்பா நமக்கு நல்ல லாபம் கொடுக்கும் என்று அவள் சொன்னபோது

இல்லமா அது பல கோடி ரூபா இன்வெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும் .நாளைக்கு ஏதாவது தவறு வந்தா என்ன பண்றது? என்று கேட்க.

இல்ல இந்த பிராஜக்ட் நல்லா இருக்கு .நல்லாருக்குன்னு என் உள் மனசு சொல்லுது. அதனால கண்டிப்பா நீங்க இந்த பிராஜெக்ட்ட பண்ணுங்க. நல்லபடியா நடக்கும் என்று ராஜேஸ்வரி சொன்னாள்.ராஜேஸ்வரி சொன்ன ஒற்றை வார்த்தையை நம்பி பல கோடி ரூபாய்களை முதலீடு செய்தான்.

சிறிது காலத்திற்கு எல்லாம் ராஜேஸ்வரி சொன்னபடியே அந்த பிராஜெக்ட் மோகனுக்கு பல கோடிகளை சம்பாதித்து தந்தது மனைவியை உச்சிநுகர்ந்து கொண்டாடினான்.

மனைவி தான் அவன் தாரக மந்திரம் என்பதாகி விட்டது. எது செய்தாலும் அவளை கேட்காமல் எதுவும் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தான் மோகன்

இதற்கிடையில் இரண்டு குழந்தைகள், அப்பா, அம்மா என்று பெரிய குடும்பத்தையும் தாங்கி வந்தாள். கணவனுடைய தொழில் மட்டுமல்லாது இரண்டு பெண் குழந்தைகள், குடும்பம் என்று அத்தனை சுமைகளையும் ராஜேஸ்வரி ஒற்றை ஆளாய் தூக்கி சுமந்தாள்.

ராஜேஸ்வரி ரொம்ப வேலையா இருந்ததுன்னா வேலையாள் போட்டுக்கோ என்று கணவன் சொல்லிப் பார்த்தும் கூட அதை நிராகரித்து விட்டாள் ராஜேஸ்வரி.

என்னங்க நம்ம வீட்டு வேலையை செய்றதுக்கு ஏன் வேலைக்காரி. வேண்டாம் .நான் எல்லாம் பாத்துக்குறேன் என்று கணவனுக்கு ஆறுதல் சொன்னாள்..

இப்படி போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ராஜேஸ்வரிக்கு ஒரு நாள் உடல்நலம் சரி இல்லாமல் போனது. தொழில் வேலை என்று மோகன் ஆங்காங்கே சுற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது .அப்போது மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டாள் ராஜேஸ்வரி .

அவளுக்கு கொடிய நோயின் தாக்கம் இருப்பது தெரியவந்தது.

எத்தனை கோடிகள் செலவு அழிந்தாலும் பரவாயில்லை என் ராஜேஸ்வரி எனக்கு வேண்டும் என்று மருத்துவரிடம் பிடிவாதமாக சொன்னான் மோகன் .

மருத்துவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே ?மருந்து மாத்திரைகளை கொடுத்து பார்த்தார்கள் . ராஜேஸ்வரியை பிடித்த நோய் அவளை விட்டு விலகவே இல்லை. இறுதி வரை மருந்து மாத்திரையும் சாப்பிட நோய் அவளை கொன்ற பிறகு தான் சந்தோஷம் அடைந்தது.

குய்யோ முறையோ என்று அழுதான் மோகன்.

அவனின் அத்தனை தரப்புகளும் ஒழிந்து விட்டதாக உணர்ந்தான். இனிமேல் தான் என்ன செய்யப் போகிறோம் ? என்று கூறி அழுதான்.

அவனின் அத்தனை வெற்றிக்கும் மனைவி மட்டுமே ஆதாரச் சுருதியாக இருந்தாள். ஆனால் இப்போது அவள் இல்லை என்பது அவனுக்கு தெரிந்த போது அவன் கண்கள் குளமாகின.

இனி உறவு என்பதும் சொந்தம் என்பதும் அவளோடு இல்லை என்பது அவனுக்குத் தோன்றியது.

கனவன் இருந்து மனைவி இறந்தால் மனைவிக்கு குழந்தைகள் ஆறுதலாக இருப்பார்கள் . கணவன் இருந்து மனைவி இறந்தால் யார் யாரோ இருந்தாலும் அது வெற்றிடமாகவே இருக்கும்.

இப்போது மோகனின் நிலைமையும் அப்படித்தான். அவன் ஒவ்வொரு நாளும் ராஜேஸ்வரியின் நினைவுகளோடு தான் தூங்குவான். அவளின் நினைவுகளோடு தான் எழுகிறான்.

மனைவி இருக்கும் போதே கணவனை இறந்து விட வேண்டும். அப்படி இல்லாமல், கணவன் இருந்து மனைவி இறந்தால் அந்தக் கணவன் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அது பெரிய வேதனை என்று சொன்னான் மாேகன்.

அதைக்கேட்ட நண்பர்கள் அத்தனை பேரும் தங்கள் மனைைவிகளைத் தேடி ஓடினர்.

கட்டிய மனைவியை இறப்புக்கு இரையாய்க் கொடுத்துவிட்டு புலம்பும் கணவன்மார்களின் கவலை வருத்தத்திற்குரியது. மோகன் இப்போது கவலைக் குளத்தில் நீந்தி கொண்டிருக்கிறான்.

இதெல்லாம் வார்த்தைகளால் சொல்லி தேறுதல் ஆறுதல் சொல்ல முடியாது. அது கஷ்டப்படுபவனுக்கு மட்டும் தான் தெரியும்.

மோகன் இப்போது கஷ்டப்படுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *