சிறுகதை

மனைவி சொல் மந்திரம் – ராஜா செல்லமுத்து

பார்த்திபன் பழகுவதற்கு இனிமையானவர்; எளிமையானவர்; அன்பானவர் என்று எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டவர்.

அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது. அப்படியிருக்கையில் அவருக்கு கண்ணுக்குத் தெரியாது என்று சிலர் அவரின் மரணத்தைக் குறிக்கத் தொடங்கினார்கள்.

அது எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்பது அவருக்கு தெரியாமல் இருந்தது.

அவர் அன்றாட வாழ்க்கையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது சில அச்சுறுத்தல்கள் அவரைப் பின்தொடர்ந்தன.

முதலில் சாதாரணமான பின்தொடர்தல் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு அந்த பின்தொடரும் அச்சுறுத்தல் தன் உயிருக்கு ஆபத்து என்று பின்னர் தெரிந்து கொண்டார்.

இப்போதெல்லாம் தெளிவாகவும் தன்னைத்தானே கண்காணித்துக் கொள்ளவும் இருந்தார்.

அதற்கு காரணம் தன் உயிருக்கு ஏதோ ஒருவகையில் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.

ஆனால் எந்த வகையில் அந்த ஆபத்து வந்திருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை.

காரணம் கொஞ்சம் வசதி படைத்தவர், சமூகத்தில் நல்ல பேர் உள்ளவர். அவரின் பணம் பொருள் ஆஸ்தியை அடைய வேண்டும் என்பதற்காக சிலர் அவரின் உயிருக்கு சிலர் திட்டம் போட்டு இருக்கலாம் என்பது அவருக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

ஒவ்வொரு முறையும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விட்டிற்கு வருவார்.

சில சமயங்களில் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என்று பயன்படுத்துவார்.

அப்படிப் பயன்படுத்தும்போது பயந்து பயந்து கொண்டே வாகனங்களை இயக்கி கொண்டு வருவார்.

வழக்கம் போலவே அன்றும் தன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தொப்பலாக எடுத்து வந்தார் பார்த்திபன்.

‘என்னங்க ஏசி கார்ல தானே வந்தீங்க? ஏன் இவ்வளவு வேர்த்திருக்கு உட்காருங்க’ என்று கரிசனையாக தன் கணவனை அமரவைத்து தொப்பலாக நனைந்து இருந்த சட்டையைக் கழட்டி ஈரத்தைத் துவட்டி எடுத்தாள் பார்த்திபன் மனைவி கமலா.

‘என்ன பயம் உங்களுக்கு? ஏன் இப்படி நனைச்சீங்க?’ என்று கேட்டபோது,

‘என்னமோ தெரியல. என்ன யாரோ பின் தொடறது மாதிரி இருக்கு. என் உயிருக்கு அச்சுறுத்தல் வரும்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதனால ஒரு அச்சம் அதனாலதான் எனக்கு வேர்க்குது’ என்றார்.

‘எதா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் பாத்துக்குறேன். ஒரு ஆம்பள இப்படி பயந்தா எப்படி?’ என்று கணவனுக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் சொன்னார் மனைவி கமலா.

‘நீ சொல்றது கரெக்டு தான். இருந்தாலும் நான் சமாளிக்கிறேன்’ என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னார் பார்த்திபன்.

வழக்கம்போல அன்றும் தன் அலுவலகத்தை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் பார்த்திபன்.

யார் என்ன செய்தாலும் வருவதைப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு அன்று தன் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

அங்கே சூழ்ந்திருந்த கும்பல் அவரை விரட்டியது. எப்படி வாகனத்தை இயக்குவதென்று தெரியாமல் அப்படியும் இப்படியும் ஒட்டிக் கொண்டு சென்று கீழே விழுந்த பார்த்திபன், உயிர் தப்பினால் போதும் என்று இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அதற்குள் தன் மேல் அரிவாள் வெட்டு விழுந்து விடுமோ? என்ற பயத்தில் வண்டியை போட்டு விட்டு ஓடினார்.

அந்த வெறி கொண்ட கும்பல் அவரை விரட்டியது. தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். அந்தக் கும்பல் தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர் உயிர் பிழைக்க ஓடுவதால் எப்படி எந்த வேகத்தில் போகிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை.

ஒரு வழியாகத் தன் அடுக்குமாடிக் குடியிருப்பின் படிகளில் ஏறி மூச்சு முட்ட முட்ட மூச்சுத் திணறத் திணற படிகளில் ஏறினார்.

தன் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்து விட்டதாக நினைத்தார் பார்த்திபன். வீடு வரை விரட்டி வந்த அந்தக் கும்பல் பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்ததும் அப்படியே ஓடிவிட்டது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்த போது மனைவி வேறாெருவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

கணவன் கூட அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் பேசியது இன்னதென்று தெரியாமல் இருந்தது.

எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தார் பார்த்திபன்.

அப்போது மனைவி ரொம்ப சன்னமான குரலில் பேசினாள்.

‘என்ன இப்படி? இன்னைக்கும் அவரை போட முடியலையே? தப்பு. மறுபடியும் வீட்டுக்கு வந்துட்டாரு. இனி ஒன்னும் செய்ய முடியாது. நாளைக்கு பாத்து இருங்க. நாளைக்கு தப்ப கூடாது’ என்று மனைவி கணவனைக் கொலை செய்யச் சொல்லி போட்ட திட்டத்தின் ஆட்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

இதை சற்றும் எதிர்பாராத கணவன் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தார்.

அந்தக் கூலிப்படையிடம் தன் கணவனைக் கொல்ல உத்தியைச் சொல்லிவிட்டு, கணவன் கண் எதிரே அமர்ந்தாள்.

‘என்னங்க இன்னைக்கும் பயமா? இப்படி பயந்தா வேலைக்காகாது தைரியமா இருக்கணும். யார் வந்தாலும் எதிர்த்து நிக்கணும். நீங்க ஆம்பள தானே? எதுக்கு இப்படி கோழைத்தனமாக ஓடி வர்றீங்க?’ என்று கணவனுக்கும் மீசைய முறுக்கினாள்.

அவரின் சொத்து, ஆஸ்தி, அந்தஸ்து அத்தனையும் குழந்தை இல்லாத தனக்கு வந்து சேர வேண்டும். கணவனின் வீட்டில் இருந்து வரும் நச்சரிப்பு, கணவனின் சொத்துக்களை ஏமாற்ற நினைக்கும் குடும்பத்தினருக்கும் அத்தனையும் அவரின் சொத்து போய்விடும் என்பதற்காக தன் பெயரில் எழுதி வைத்துக் கொண்டு கணவனை போட்டுத் தள்ளுவதற்காக மனைவி நடத்தும் நாடகம் பார்த்திபனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை தான்.

மனைவி தனக்குத் தைரியம் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு இன்றும் தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டு தன் உயிரை கையில் பிடித்தபடி படுக்கையில் விழுந்தார்.

அடுத்தநாள் கணவனை எப்படி கொல்வது? என்று சிந்தனையில் திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் கமலா.

இதை அறியாத கணவன் தன் மனைவி சொல்லே மந்திரம் என்று நினைத்தபடியே தூங்கப் பாேனான்.

அடுத்த நாளுக்கான உத்தியை கூலிப்படை இடம் சொல்லிக் கொண்டிருந்தாள், கமலா.

Leave a Reply

Your email address will not be published.