சிறுகதை

மனைவியை நேசி | துரை. சக்திவேல்

மாலை 7 மணி தனியார் அலுவலகத்தில் பணிகள் எல்லாம் முடிந்து அனைவரும் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.
அலுவலக உதவியாளர் மணி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு இருந்தார்.
அப்போது அலுவலகத்தின் போனில் மணி அடித்தது.
அதனை மணி எடுத்து ஹலோ யார் பேசுறது என்று கேட்டான் மணி.
எதிர் முனையில் ஹலோ நான் கோபி சார் மனைவி பேசுறேன்… சார் ஆபிசில் இருக்காரா? அவரிடம் போன் கொடுங்களேன் என்றார்.
மேடம் நான் ஆபிஸ் பாய் மணி பேசுறேன். சார் கிளம்பி போயிட்டாரே… நீங்கள் செல்போனில் பேசுங்களேன் என்றான்.
அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அது தான் அலுவலக போனுக்கு தொடர்பு கொண்டேன்.
அவரு எப்ப கிளம்புனாரு என்று திரும்ப கேட்டார் கோபியின் மனைவி சுதா.
சார் 5.50க்கு எல்லாம் கிளம்பி போயிட்டாரு. இன்னும் வீட்டுக்கு வரவில்லையா மேடம் என்று கேட்டார் மணி.
சார் கொஞ்ச நாளா இரவு 8 மணிக்கு தான் வருவார். இன்று எங்க சொந்தகாரங்கள் வீட்டுக்கு வந்திருக்காங்க. அவரிடம் பேசனும்னு
சொன்னாங்க; அதுதான் போன் போட்டேன்.
சார் இப்ப கொஞ்ச நாலா காலையில் சீக்கிரம் கிளம்பி வருகிறார். மாலை லேட்டாக வீட்டுக்கு வருகிறார் . அலுவலகத்தில் வேலை அதிகமா இருக்கா? வழக்கமா எத்தனை மணிக்கு அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு
கிளம்புகிறார் ? என்று சுதா கேள்வி கேட்டார்.
துணை மேலாளர் கோபியின் சில தகாத நடவடிக்கை ஏற்கனவே மணிக்கு தெரியும். அதனால் அவன் அதற்கு மேல் பேசாமல் சரி மேடம் நான் போனை வைக்கிறேன் என்று கூறி போனை துண்டித்தான்.
வழக்கம் போல் இரவு 8 மணிக்கு கோபி தனது வீட்டுக்கு சென்றார்.
அவரிடம் மனைவி சுதா விசாரணை நடத்துவது போல் கேள்விகள் கேட்டார்.
ஆனால் கோபி வெவ்வேறாக பேசி அவரை சமாளித்து விட்டார்.
மறு நாள் காலை 9 மணிக்கு அலுவலகத்தை திறந்து வைத்து சுத்தம் செய்து கொண்டு இருந்தான் மணி.
அலுவலகத்திற்குள் வந்தார் துணை மேலாளர் முரளி.
அவரிடம் நேற்று மாலை கோபியின் மனைவி போன் செய்த தகவலை கூறினான் மணி.
சார் அவங்க பேசினதை பார்த்தா எனக்கே பரிதாபமா இருக்கு சார்.
நம்ம கோபி சாரின் நடவடிக்கை கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. அவர் உங்களுடைய நண்பர் தானே சார் நீங்க கொஞ்சம் அவருக்கு எடுத்து சொல்லக்கூடாதா என்று மணி கூறினார்.
மணியின் வார்த்தை முரளிக்கு புரியவில்லை.
என்ன மணி சொல்ற எனக்கு ஒண்ணும் புரியலையே… கொஞ்சம் தெளிவா சொல்லு என்றார் முரளி.
சார் நீங்களும் கோபி சாரும் 15 வருஷமா இங்க ஒண்ணா வேலை பார்க்குறேங்க… அவரும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உங்களுக்கு தெரியாமா அவர் எதையும் செய்யமாட்டார் என்றான் மணி.
மணி நீ சொல்வது எல்லாம் உண்மை.
ஆனால் இப்ப கொஞ்ச நாளா அவனோட நடவடிக்கை எனக்கு புரியவில்லை.
அவனும் என்னிடம் ஒண்ணும் சொல்லவில்லை. உனக்கு ஏதாவது தெரிந்தா சொல்லு மணி தெரிஞ்கிடலாம் என்று மேலாளர் முரளி கேட்டார்.
கடந்த ஒரு மாதமா கோபி சார் காலையில் லேட்டா தான் வருகிறார். மாலையிலும் இங்கிருந்து லேட்டா கிளம்புகிறார்.
தினமும் பஸ்சில் ஒரு பொண்ணு கூடத்தான் வருகிறாராம். திரும்ப வீட்டுக்கு அந்தப் பொண்ணு கூடத்தான் பஸ்சில் ஒண்ணா போகிறாராம்.
அவங்க இரண்டு பேரும் ரொம்ப நெருக்கமா தான் பழகுறாங்களாம்.
இதெல்லாம் கோபி சாரின் வீட்டுக்கு பக்கத்தில் இருந்து வரும் மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்க்கும் ஒரு பையன் சொன்னான்.
அந்தப் பொண்ணு அலுவலகம் இங்க தான் பக்கத்தில் இருக்குதாம்.
அதனால் அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக தினமும் செல்கிறார்கள் என்று அந்த பையன் கூறினான்.
இது ஒண்ணும் தப்பா இருக்காது…. ஏனென்றால் இவருக்கு திருமணமாகி 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள் என்று நான் அந்த பையனிடம் சொன்னேன்.
ஆனால், அந்தப் பையன் ஒத்துக்கவே இல்லை.
அவங்க இரண்டு பேரும் அந்த அளவுக்கு பஸ்சில் நெருக்கமாக பேசிகிட்டு வருவாங்களாம்.
தினமும் காலை கோபி சார் தான் அந்தப் பொண்ணுக்கு டிபன் எடுத்துட்டு வருவாராம். பஸ்சில் இரண்டு பேரும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுக்கிட்டே வருவாங்களாம்.
அவன் கூறியதை நான் ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால்…. என்று இழுத்தான்.
என்ன மணி ஆனால் என்று இழுக்கிற என்று முரளி கேட்டார்.
போன வாரம் மாலை 7 மணி இருக்கும். நான் நம்ம அலுவலகத்திற்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் போனேன். அங்கு பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது எனக்கு பின்னால் ஒரு சத்தம் கேட்டது. என்னடா இது நம்ம அடிக்கடி கேட்கும் குரல் மாதிரி இருக்கேன்னு லேசா திரும்பி பார்த்தேன்.
அப்போது ஒருவர், ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு அந்த கடையின் வாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
யார் என்று உற்று பார்த்தேன். அது நம்ம கோபி சார்.
அவரு அந்த பொண்ணின் கையை பிடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொண்டு சுற்றி யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் வேகம் வேகமாக நடந்து சென்றார்.
அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்தால் கணவன் மனைவி போன்று தான் நெருக்கமாக சென்றார்கள்.
தினமும் மாலை கோபி சார் அலுவலகத்திலிருந்து லேட்டா கிளம்பி, அந்த பொண்ணு பஸ் நிலையத்திற்கு வந்து பின்னர் இருவரும் சேர்ந்து பஸ்சில் செல்கிறார்களாம்.
சில நேரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஓட்டலில் ஒன்றாக சாப்பிட்டு விட்டு தான் செல்கிறார்களாம்.
ஒரு சில நாட்களில் கோபி சார் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பொண்ணை அழைத்துக் கொண்டு வருகிறாராம். அவர்கள் இரண்டு பேரும் பைக்கில் வரும் போது ரொம்ப நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு தான் வருகிறார்களாம்.
இதெல்லாத்தையும் பார்க்கும் எனது நண்பர்கள், ‘‘ டே மணி… உங்க சாருக்கு வாழ்வு தான்’’ என்று கிண்டலாக பேசுகிறார்கள் சார்.
நம்ம கோபி சார் தப்பு செய்யமாட்டார்னு நாம நினைக்கலாம். ஆனா இந்த விஷயத்தில் யாரையும் நம்ம முடியாது சார்.
அவர் மனைவி நேற்று பேசுவதை பார்த்தால் எனக்கே பரிதாபமாக இருக்கும்.
அதனால் நீங்க கொஞ்சம் அவருக்கு எடுத்து சொன்னா நல்லா இருக்கும் என்றான் மணி.
மணி கூறியதை கேட்டதும் முரளிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஏனென்றால் முரளியும் கோபியும் 10 வருடங்களாக குடும்ப நண்பர்கள்.
அந்த அளவுக்கு நெருங்கிப் பழகும் தன் நண்பர் பாதை மாறி போகிறார் என்று கேள்வி பட்டதும் முரளியின் மனம் பதற்றம் அடைந்தது.
தனது நண்பருக்கு இதனை புரிய வைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் கோபி அலுவலகத்திற்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் மணி வேகமாக தனது இடத்திற்குச் சென்றான்.
கோபி நேராக முரளி இருக்கும் இடத்திற்கு வந்து, சாரி பஸ் கொஞ்சம் லேட்டாச்சு என்று லேட்டாக வந்ததற்கான காரணத்தை கூறினார்.
உடனே முரளியும் சரி என்று கூறினார்.
அதன் பின் கோபி தனது இடத்திற்கு சென்று தனது வேலையை தொடர்ந்தார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் முரளி, கோபியை தனது அறைக்கு அழைத்து பேசினார்.
என்ன கோபி உனக்கு புதுசா ஒரு நண்பர் கிடைச்சிருக்கிறதா சொல்றாங்க. காலையிலும் மாலையில் அந்த நண்பர் கூட ஒரே பஸ்சில் சேர்ந்து வருவதாகக் கேள்வி பட்டேன்.அது உண்மை தானா ? என்று கேட்டார்.
அதிர்ச்சியடைந்த கோபி, தினமும் ஒரே நேரத்தில் வருவதால் ஏற்பட்ட பழக்கம். அதுதான் ஒண்ணா பேசிக்கிட்டு வருவோம். அவ்வளவு தான் என்று சமாளித்தார்.
கோபி உனக்குன்னு ஒரு மனைவி இருக்காங்க. வயசுக்கு வந்த பொண்ணு இருக்கா. அதை மனதில் வைத்துக் கொள்.
பெண் நண்பர்கள் இருப்பது தப்பு கிடையாது.
ஆனால் பெண்களுடான நட்புக்கு ஒரு வரைமுறை இருக்கு. அதை மீறக்கூடாது.
நீ இந்த மாதிரி அந்த பொண்ணு கூட நெருக்கமாக இருப்பது உன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள்.
குடும்பத்தில் வீணான பிரச்சினை ஏற்படும். அதை கொஞ்சம் யோசித்து பார்.
உன் மனைவியை மட்டும் நேசி. இது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள் என்று முரளி கோபிக்கு அறிவுரை கூறினார்.
முரளி தான் வரம்பு மீறி அந்த பெண்ணுடன் பழகுவதை உணர்ந்தார்.
தன் தவற்றை உணர்ந்து வருத்தப்பட்டார்.
அந்த பெண்ணுடன் ஏற்பட்ட நட்பை துண்டித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *