ஜெய்ப்பூர், ஜூன் 22–
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் மனைவிக்கு ஜீவானம்ச நிலுவைத்தொகை அளிக்க 7 மூட்டைகளில் 55000 ரூபாயை சில்லரை காசுகளாக கணவன் கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தஷ்ரத் குமாவத். இவருக்கும் மனைவி சீமா குமாவத்திற்கும் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆனது. மனைவிக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 11 மாதங்களாக ரூ. 55,000 பராமரிப்பு தொகை செலுத்தவில்லை என்பதால் கடந்த 17ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
7 சாக்கு மூட்டைகளில் பணம்
விடுமுறை காரணமாக குடும்பநல நீதிமன்றம் மூடப்பட்டதால், ஜெய்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான கணவன், மனைவியின் பராமரிப்பு நிலுவைத் தொகையான 55000 ரூபாயை ஒரு ரூபாய், 2 ரூபாய் சில்லரை காசுகளாக 7 சாக்கு மூட்டைகளில் கொண்டு வந்தார். இதற்கு அவரது மனைவியின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். இதுவும் ஒரு மனரீதியான துன்புறுத்தல் தான் என வாதிட்டார்.
ஆனால் இந்த நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று கணவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நாணயங்களாக அளிக்க ஒப்புதல் அளித்தார். ஆனால் சாக்குமூட்டைகளில் கணவர் கொண்டு வந்த நாணயங்களை எண்ணி, தலா ஆயிரம் ரூபாய் பாக்கெட்டுகளாக தயாரித்து அளிக்க வேண்டும் எனவும் கணவர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சில்லரை காசுகளை எண்ணி பாக்கெட்டுகளை உருவாக்கும் பணியில் கணவர் ஈடுபட்டார்.
இந்த சில்லறை காசு பாக்கெட்டுகள் ஜூன் 26 ந்தேதி நடைபெறும் அடுத்த விசாரணையின் போது மனைவியிடம் ஒப்படைக்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.